மனித வியாபாரம் காரணமாக பொருளாதாரத் தடைவிதிக்கும் பட்டியலில் இலங்கை இடம் பெற்றுள்ளது. கடந்த அரசாங்கம் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
மனித வியாபாரத்துக்கு எதிராக செயற்படும் மத்திய நிலையம் ஒன்றை நேற்று முன்தினம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு வியாபாரம் தண்டனைக்குரிய குற்றம் என்பதுடன் சட்டவிரோத செயலாகும் என இலங்கையின் தண்டனை கோவை சட்டத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு என்ற வகையில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பாக கதைத்தாலும் குற்றச்சாட்டுக்களை சுமத்தினாலும் நாங்கள் நல்ல நிலைமையில் இல்லை.
கடந்த காலத்தில் இந்த துறையில் இருந்தவர்கள் இந்த பிரச்சினை இந்தளவு பெரிதாகும் வரைக்கும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் ஏன் எடுக்கவில்லை என்பது தெரியவில்லை. ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் மூலம் இலங்கை மனித வியாபாரத்துக்கு இலக்காகும் நாடாக இலங்கை வெளிப்பட்டுள்ளது.
அதேபோன்று மனித வியாபாரம் காரணமாக பொருளாதாரத் தடை விதிக்கும் பட்டியலிலும் எமது நாட்டின் பெயர் இடம் பெற்றுள்ளது.
நாடு என்ற வகையில் இலங்கை இந்த மனித வியாபாரத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா அல்லது தொடர்ந்து அதே நிலைமையில் இருக்கின்றதா என்பதை ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கின்றது.
எனவே மனித வியாபாரத்துக்கு எதிராக செயற்படும் இந்த மத்திய நிலையம் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்கள் உட்பட மனித வியாபாரத்துக்கு ஆளாகின்றவர்களுக்கு தேவையான நிவாரணங்களை பெற்றுக்கொடுத்தல், பாதுகாப்பளித்தல் மற்றும் சட்டத்துக்கு அமைய நடவடிக்கை எடுத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
அத்துடன் மனித வியாபாரத்துக்கு தொடர்புபட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச ரீதியில் உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக இந்த மத்திய நிலையத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்படும். மனித வியாபாரத்துக்கு இலக்காகின்றவர்கள் தங்களுக்கு நிகழ்ந்த அநீதிகள் தொடர்பாகவும் இந்த மத்திய நிலையத்தில் முறைப்பாடுகளை தெரிவிக்கலாம்.
இந்த முறைப்பாடுகள் தொடர்பாக சர்வதேச வெளிநாட்டு தொழில் அமைப்பு, சர்வதேச தொழிலாளர் அமைப்பு போன்ற நிறுவனங்கள் மற்றும் பொலிஸார், சட்டமா அதிபர் திணைக்களம் என்பவற்றுடன் தொடர்புபட்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கல், பாதுகாப்பு ஏற்பாடுகளும் இடம்பெறும் என்றார்.