Breaking
Mon. Dec 23rd, 2024
நாட்டிலிருந்து வறுமையை ஒழிப்பதும் அபிவிருத்தியை அடைந்து கொள்வதுமே இலங்கையின் கொள்கை எனக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அதுவே நாட்டில் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்கான வழி என்றும் தெரிவித்துள்ளார்.
போர்த்துக்கல், அயர்லாந்து, மெக்சிக்கோ மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்களிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வு நேற்று (21) பிற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கை தேயிலை உலகெங்கிலும் பிரசித்திபெற்றுத் திகழ்வதாகத் தெரிவித்த மெக்சிக்கோ நாட்டின் தூதுவர் திருமதி Melba Pria Olavarriet இலங்கை கறுவாவும் மெக்சிக்கோவில் மிகவும் பிரசித்தமானது என்றும் கறுவாத் தேவையில் 80 வீதமானவை இலங்கையிலிருந்தே கிடைக்கப்பெறுவதாகவும் தெரிவித்தார். இலங்கையும் கிரேக்கமும் மிக நீண்டகாலமாக வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளன என்றும் இரு நாடுகளும் கடல் மார்க்கக் கூட்டுறவுகளை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும் கிரேக்க நாட்டின் புதிய தூதுவர் தெரவித்தார்.

போர்த்துக்கல் குடியரசும் இலங்கையும் தமது நட்புறவையும் கூட்டுறவையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என போர்த்துக்கல் குடியரசின் தூதுவர் திரு. Joado Carmo Ataide da Camara தெரிவித்தார். இலங்கைக்கும் ஐயர்லாந்துக்கும் இடையே கல்வி முறைமையில் ஒப்புறவுகள் உள்ளன எனத் தெரிவித்த ஐயர்லாந்து நாட்டின் தூதுவர் Brian McElduff கல்வித்துறையில் இரு நாடுகளும் கூட்டுறவை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றும் இவ்விடயத்தில் எமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

புதிய தூதுவர்களின் கருத்துக்களுக்கு பதிலளித்துப் பேசிய ஜனாதிபதி, இலங்கையின் வெளியுறவுக்கொள்கை உலகில் உள்ள எல்லா நாடுகளுடனும் நட்புறவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது எனத் தெரிவித்தார். வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் எல்லா நல்ல விடயங்களையும் எமது மக்களுக்க வழங்குவது எமது நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் வர்த்தக உறவுகளைப் பேணி வரும் இலங்கை எதிர்காலத்தில் சீனாவுடனும் அவ்வுறவுகளை விரிவுபடுத்தும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் திரு. பீ.பீ அபேகோன் மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனீ வாகீஸ்வர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

By

Related Post