Breaking
Mon. Dec 23rd, 2024
  • சுஐப் எம் காசிம்

வைத்தியர்கள் நீண்டகாலமாக தமக்கென ஒரு சங்கத்தை வைத்திருப்பது போன்று பொறியியலாளர்களுக்கென கவுன்ஸில் ஒன்று அமைக்கப்படுவது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த விடயமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் தெரிவித்தார்.

மின் சக்தி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட பொறியிலாளர் சட்ட மூலம் தொடர்பிலான விவாதத்தில் இன்று (23) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கலாநிதிகளின் கௌரவம், அந்தஸ்து பாதிக்கப்படும் வகையில் பணத்துக்காகவும் வேறு நோக்கங்களுக்காகவும் நாடளாவிய ரீதியில் பட்டங்கள் வழங்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமெனவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,

பொறியியலாளருக்கென கவுன்ஸில் அமைக்கப்பட வேண்டுமென நீண்டகாலமாக பாடுபட்டவர்களில் நானும் ஒருவன். இந்தத் துறையை சார்ந்தவன் என்ற வகையில், இதில் ஆர்வம் கொண்டு பல்வேறு கலந்துரையாடல்களில் பங்கேற்று ஆலோசனைகளை முன்வைத்து அதற்கான முழு முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கின்றேன்.

ஜனாதிபதியின் அங்கீகாரத்துடனும் அமைச்சர் சம்பிக்க மற்றும் பட்டயப்பொறியியளார்கள், துறை சர்ந்த பொறியியலாளர்கள், சட்ட வரைஞர் திணைக்களத்தைச் சார்ந்தோர் ஒத்துழைப்புடன் இந்தச் சட்ட மூலம் கொண்டு வரப்படுவது அரிய முயற்சியாகும்.

பாகிஸ்தான் போன்ற நாடுகளில் 40 வருடங்களுக்கு முன்னரேயே பொறியியலாளர்களுக்கென ஒரு கவுன்ஸில் உருவாக்கப்படிருக்கின்றது. அது நமது நாட்டில் இப்போது தான் சாத்தியப்பட்டுள்ளது. பொறியியியல் துறை சார்ந்தோரின் கௌரவம், பெறுமதி, அந்தஸ்து ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் இந்த முயற்சி பெரிதும் பயனளிக்கும்.

பொறியியலாளர் தொடர்பிலான அளவீட்டுக்கு இந்தக் கவுன்ஸில் பாரிய பங்களிப்பு செய்யும் என நம்புகின்றேன். பொறியியலாளர் கவுன்ஸிலில் பல்துறை சார்ந்தவர்கள் அங்கம் வகிக்கும் நிலை உள்ள போதும் ஒரு தரப்பு சார்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் ஏனையோரின் உரிமைகளும் நலன்களும் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டென்பதால் பாதிக்கப்பட்டோர் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று நியாயம் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையிலான ஏற்பாடுகள் இருக்க வேண்டுமென்பதிலும் இந்த உயர் சபை தனது கவனத்தை ஈர்க்க வேண்டும். இந்த சட்ட மூலத்தில் அது குறிப்பிடப்படாததால் அதனையும் சேர்த்துக் கொள்வது கவுன்ஸிலின் நடவடிக்கைகளை பலப்படுத்தும் என நம்புகின்றேன்.

இந்தக் கவுன்ஸில் பிரதமரின் தலைமையில் இயங்க வேண்டுமென ஆலோசனை தெரிவித்தவர்களில் நானும் ஒருவன். பல சவால்கள் பிரச்சினைகளுக்கு மத்தியிலே நீண்டகாலமாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தக் கவுன்ஸிலுக்கான சட்ட மூலம் இன்று சமர்ப்பிக்கபடுகின்றது.

திணைக்களத்தில் வேலை செய்யும் பொறியியலாளர்கள் கவுன்ஸிலில் அங்கம் வகிக்க முடியும் என சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்ட போதும் அதிகார சபைகளிலோ (Authority) சபைகளிலோ (Board) பணியாற்றும் பொறியியலாளர்கள் அங்கம் வகிப்பது தொடர்பிலான திருத்தத்தை உள் சேர்க்குமாறு வேண்டுகிறேன்.

பொறியியலாளர்களின் அந்தஸ்தை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்படவுள்ள இந்த கவுன்ஸிலை அமைப்பதற்கான சட்டமூலத்தை சமர்ப்பித்த அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பிரதியமைச்சர் அஜித் பெரேரா ஆகியோருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எனது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

 

Related Post