ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்காத குற்றத்தடுப்பு பொலிஸ் பரிசோதகர் தற்காலிகமாக பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொலிஸ் பரிசோதகர் சிசேர என்பவரே இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அவர் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் யாழ். நகரப்பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்குப் பிணை வழங்கப் பொலிஸார் ஆட்சேபம் தெரிவிக்காததை அடுத்து யாழ். நீதிமன்ற பதில் நீதிவான் பிணை வழங்கியதுடன், வழக்கையும் ஒத்திவைத்தார்.
பின்னர் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் பிணை அனுமதியை இரத்துச் செய்ததுடன், குறித்த இரு இளைஞர்களையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அத்துடன், பிணை வழங்குவதற்கு பொலிஸார் ஆட் சேபிக்காததையும், அதேவேளை ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் தமிழ் இளைஞர் ஒருவருக்கு இந்தோனேசியாவில் சாவுத் தண்டனை விதிக்கப்பட்டதனையும் சுட்டிக் காட்டி, பொலி ஸாரின் நடவடிக்கையில் அதிருப்தியையும் வெளியிட்டிருந்தார்.
ஹெரோயின் வழக்கில் பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்காத பொலிஸ் அதிகாரி குறித்த பதவிக்குப் பொருத்தமானவரா என்பதைத் தெளிவுபடுத்தும் அறிக்கை ஒன்றினை நீதிமன்றுக்குச் சமர்ப்பிக்குமாறும் யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிட்டார். அதன் பிரகாரம் குறித்த பொலிஸ் பரிசோதகர் நேற்று முன்தினம் பொலிஸ் திணைக்களத்தால் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.