Breaking
Fri. Nov 22nd, 2024

பொலிஸ் சேவையை உண்மையான மக்கள் நட்புடைய சேவையாக ஆக்குவதே புதிய அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று (27) பொலன்னறுவையில் ஜனாதிபதி அலுவலகம், சட்டமும் ஒழுங்கும் தொடர்பான அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியன இணைந்து மேற்கொள்ளும் ஒன்றிணைந்த பொலிஸ் நடமாடும் சேவையின் முதலாவது நிகழ்ச்சித்திட்டத்தில் இணைந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

‘சிறந்ததோர் சமூகம் – பாதுகாப்பான ஒரு நாடு’ என்ற கருப்பொருளின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தில் வெலிகந்த, திம்புலாகல, தமன்கடுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் சுமார்  100 நாட்களாக இந்த இணைந்த பொலிஸ் நடமாடும் சேவை நடைபெற்றது. இதன் இறுதி நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் மனம்பிட்டிய நிசங்கமல்லபுர கனிஷ்ட வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதனோடு இணைந்ததாக மாவட்டமெங்கிலும் பல்வேறு மக்கள் சேவைகளும் முன்னெடுக்கப்பட்டதோடு, வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுத்தல், விகாரைகளுக்கான திரிப்பிட்டக்க நூல் தொகுதிகளை அன்பளிப்புச் செய்தல் அங்கவீனர்களுக்கான உபகரணங்களை வழங்குதல், மூக்குக்கண்ணாடிகள் வழங்குதல், சக்கர நாற்காலிகளை வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

குற்றங்களை ஒழித்தல், சிறுவர் துஷ்பிரயோகங்களை ஒழித்தல், போதைப்பொருள் ஒழிப்பு, வீதிப்பாதுகாப்பு தொடர்பாக பாடசாலை பிள்ளைகளுக்கு அறிவூட்டுதல் போன்ற நிகழ்வுகளும் இந்த பொலிஸ் நடமாடும் சேவையுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்பட்டிருந்தன. சூழல் பாதுகாப்பு மற்றும் சுத்தம் தொடர்பான வேலைத்திட்டங்களும் குற்றங்களை ஒழிப்பது தொடர்பில் சிவில் பாதுகாப்புக் குழுக்களைப் பலப்படுத்துதல் போன்ற நிகழ்வுகளும் மேற்கொள்ளப்பட்டதோடு, இதுவரையில் தீர்க்கப்படாத முறைப்பாடுகளை விசாரித்தல், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனையாளர்களை உடனடியாக சுற்றிவளைத்து கைதுசெய்தல் போன்ற விடயங்களும் இந்த நடமாடும் சேவையில் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, மக்களுக்கும் பொலிஸாருக்குமிடையே ஒரு நெருங்கிய தொடர்பைக் கட்டியெழுப்புவதனூடாக மிகவும் வினைத்திறன் மிக்கதோர் சேவையை முன்னெடுக்க முடியும் எனக் குறிப்பிட்டார். மக்களுடன் மிகவும் நெருங்கிச் செயற்படும் சகல அரச நிறுவனங்களும் புகழப்படுவதும் விமர்சிக்கப்படுவதும் சாதாரணமான ஒரு நடைமுறை என்பதோடு சில சந்தர்ப்பங்களில் எவ்வாறு விமர்சிக்கப்பட்ட போதும் மனித சமூகத்தின் சிறப்பான இருப்புக்கு சட்டமும் ஒழுங்கும் நடைமுறைப்படுத்துவது எமது பொலிஸ் திணைக்களம் நிறைவேற்றி வரும் ஒரு முக்கிய பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பயங்கரவாதம் நிலவிய சந்தர்ப்பத்தில் முப்படையினரும் பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட தீர்க்ககரமான பொறுப்பை ஜனாதிபதி இதன் போது பாராட்டினார். பொலிஸார் தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படும் சில பிழையான மனப்பதிவுகளை அகற்றி சமூக அபிவிருத்தி மற்றும் மக்களின் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்து வைப்பதற்காக பொலிசாரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதனூடாக ஒரு நெருங்கிய உறவை  வளர்ப்பதற்கு பொலிஸ் நடமாடும் சேவையினூடாக சந்தர்ப்பம் ஏற்படுகிறது. நாட்டிலுள்ள ஏனைய மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் எதிர்காலத்தில் இந்த பாரியளவிலான பெலிஸ் நடமாடும் சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது .

இன்றைய நிகழ்வில் சட்டமும் ஓழங்கும் தொடர்பான அமைச்சின் செயலாளர் ஜகத் விஜேவீர, பதிற் கடமைபுரியும் பொலிஸ் மா அதிபர் எஸ். எம். விக்கிரமசிங்க, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன, ஆகியோர் உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

By

Related Post