பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பான விவகாரத்தில் நேற்று (4) போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புத் துறைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
அவரிடம் நான்கரை மணிநேரம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விக்கிரமசேகர தலைமையிலான குழுவினர் சிறப்பு விசாரணை ஒன்றினை முன்னெடுத்து வாக்குமூலம் ஒன்றினை பதிவுசெய்துகொண்டதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன, தாஜுதீனின் கொலை இடம்பெற்ற காலப்பகுதியான 2012 மே மாதம் 17 ஆம் திகதியன்றும் போக்கு வரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றியிருந்தார். இந்நிலையில், வீதி விபத்தொன்றின் போது முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன?, தாஜுதீன் விவகாரத்தில் அவை பின்பற்றப்பட்டனவா?, உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் விசாரணையின் பின்னர் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக அறிய முடிகிறது.
இதனை விட, தாஜுதீன் விவகாரத்தில் விசாரணைகள் முன்னெடுத்தபோது அது கொலை என அறிய முடிந்ததா, அது தொடர்பில் நடவடிக்கை எடுத்தீரா?, அது வாகன விபத்து எனக் கொண்டு விசாரணை செய்ய யாரேனும் ஆலோசனை வழங்கினரா? அல்லது அழுத்தம் கொடுத்தனரா எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்னவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.