Breaking
Mon. Dec 23rd, 2024

-நாச்சியாதீவு பர்வீன் –

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்,அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைமைகளான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீநேசன், கிழக்கு மாகாண முதல்வர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெறும் இந்நிகழ்வில் மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள்,அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர். மட்டு மாவட்டத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி தொடர்பாக இங்கே ஆராயப்படவிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் கூறினார்.

மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் இங்கு ஆழமாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.குறிப்பாக இந்த மாவட்டத்தில் கோலோச்சும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. போதைப்பொருளை கட்டுப்படுத்துவது பற்றியும்,அதன் அவசர தேவைபற்றியும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் தெளிவான கருத்துக்களை முன்வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதை தருகின்ற ஒருவகை மாத்திரை மாணவர்கள் மத்தியில் வெகுவாக விற்கப்படுவதாகவும்.இதன் மூலம் இந்த மாவட்டத்திலுள்ள இளைஞர் சமூகம் பேரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பது பற்றியும் பிரதியமைச்சர் அமீர் அலி முன் வைத்தார்.

இந்தவிடயம் பற்றி போதை தடுப்பு பிரிவின் உயர் அதிகாரிகள்,உதவிப் பொலிஸ் அத்தியட்சர்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் அனைவரும் இந்த விடயத்தில் பூரண அவதானத்தை செலுத்துவதாகவும் உறுதியளித்தனர். இது தொடர்பில் பாடசாலைகள் தோறும் மாணவர்களுக்கான விளிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடாத்துவதும்,பெற்றார்களின் கவனத்திற்கு இதனை கொண்டு வருவது பற்றியும் ஆழமாக இங்கு ஆராயப்பட்டது.

இந்த மாவட்டத்திலிருந்து சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டது. போக்குவரத்து,வீதி அபிவிருத்தி,சுய தொழில் வாய்ப்பு,போதை பொருள் ஒழிப்பு,கல்வி அபிவிருத்தி,வேலை வாய்ப்பு போன்ற பல விடயங்கள் தொடர்பில் பல்வேறுபட்ட விடயங்கள் பற்றி இங்கு முடிவுகள் எடுக்கப்பட்டன.

By

Related Post