Breaking
Wed. Jan 8th, 2025

போதைப்பொருள் வியாபாரம் மற்றும் கடத்தல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மரணதண்டனை கொண்டுவரப்பட வேண்டும் என்ற பொதுப் பேச்சுக்கான முன்னெடுப்பொன்றை யோசனையாக முன்வைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் அவர்களின் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு மரணதண்டனையைக் கொண்டு வருவது தொடர்பில் தீர்மான மொன்றுக்கு வரவிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உலக புகைத்தல் ஒழிப்பு தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

“மரணதண்டனையை மீளக்கொண்டு வருவதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களால் எதிர்ப்புத் தெரிவிக்கப்படலாம். ஒருவரை கொலை செய்வது பிரச்சினைக்கான தீர்வாகாது என கடந்த காலங்களில் உள்நாட்டிலேயே கூறப்பட்டிருந்தது” என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டில் ஒழுங்கு முறையை பேணுவது மிகவும் முக்கியமானது. ஆட்சிசெய்யும்போது மெச்சத்தக்க செயற்பாடுகளும், விமர்சிக்கப்படும் செயற்பாடுகளும் இடம்பெறலாம். சமூகவிரோதிகளின் கைகளில் நாடு சிக்கிக்கொள்வதைத் தடுக்கும் செயற்பாடுகளை நாம் ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

புகையிலை தொடர்பான உற்பத்திப் பொருட்களின் பாவனையைத் தடுப்பதற்கு கடந்த பல ஆண்டுகளாக சுகாதார அமைச்சின் ஊடாக பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் புகையிலை நிறுவனங்களின் பணிப்பாளர்கள் முன்னிலையில் தன்னை விசாரணைக்கு இட்டுச்சென்றதாகவும் குறிப்பிட்டார். சிகரெட் பெட்டிகளின் வெளிப்புறத்தில் 80 வீதமான பகுதியில் எச்சரிக்கை புகைப்படங்களைப் பிரசுரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஏன் வெளியிட்டீர்கள் என சிகரெட் நிறுவனங்களின் பணிப்பாளர்கள் சுகாதார அமைச்சராக இருந்தபோது தன்னிடம் கேள்விகேட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

புகையிலை மற்றும் போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்து நிலைமை மோசமடைந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதில் நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Related Post