போருக்குப் பின்னரான ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்ஷாய் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தினால், நாட்டில் ஜனநாயகமும், சமாதானமும் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஐந்தாவது தடவையாக் கொழும்பில் நேற்று ஆரம்பமாகிய சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டுக்கான சர்வதேச பாதுகாப்பு மாநாடானது ‘பூகோள அச்சுறுத்தல்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் தேசிய பாதுகாப்பு’ எனும் தொனிப்பொருளில் கொழும்பில் நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்ஷாய் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கையில் அண்மைக்கால அரசியல் நடவடிக்கைககள், மற்றும் அரசியல் நிலைமைகளை அவதானிக்கும் போது இங்கு நல்லதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நம்புகின்றேன்.
பல்வேறுப்பட்ட சந்தர்ப்பங்களில் நான் இதற்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளேன். எனினும் நான் அப்போது விஜயம் செய்த போது இருந்த அரசியல் சூழ்நிலைகளும், தற்போது விஜயம் செய்த போது இருக்கும் அரசியல் சூழ்நிலைகளும் மாறுபட்டதொன்றாகவே நான் கருதுகின்றேன்.