Breaking
Mon. Dec 23rd, 2024

அரசியல் மாற்றம், குடும்ப மாற்றம், போதை மாற்றம், பிள்ளைகள் கல்வியில் வளர வேண்டும் என்ற மாற்றங்களை மகளீரை வைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்;க்கின்றேன் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மகளீர் சுயதொழில் கூட்டுறவுச் சங்க பிரதிநிகளுடனான சந்திப்பு ஒட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் நேற்று நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

மது பாவனையில் மட்டக்களப்பு மாவட்டம் முதலாவது மாவட்டமாக திகழ்கின்றது. தேசியத்திலே முதலாவதாக சாதனை படைத்த மாவட்டம் போன்று மதுபாவனைக்கு செலவழிக்கும் முதலாவது மாவட்டமாக காணப்படுகின்றது.

இந்த மாற்றத்தை கொண்டுவர வேண்டுமாக இருந்தால் உங்களுடைய பங்களிப்பு எங்களுக்குத் தேவையாக உள்ளது. போதைப் பாவனையில் இருந்து பாதிக்கின்ற சமூகத்தை நாங்கள் உருவாக்க முடியாது. போதைக்கு என்று நாங்கள் அள்ளிக் கொடுப்போமாக இருந்தால் குடும்பச் செலவுக்கான இருநூறு ரூபாய் போதுமானதாக இருக்காது. இந்த மாற்றம் மகளீருக்குள் இருந்து வர வேண்டும்.

அரசியல் மாற்றமாக இருந்தாலும் சரி, குடும்ப மாற்றமாக இருந்தாலும் சரி, போதையான மாற்றமாக இருந்தாலும் சரி, உங்கள் பிள்ளைகள் கல்வியில் வளரவேண்டும் என்ற மாற்றமாக இருந்தாலும் சரி உங்களை வைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்பு மிக்க சமூகத்தை உருவாக்குகின்ற வேலைத் திட்டங்களை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதற்கு ஆயுதம், கட்டமைப்பு தேவை. அந்தக் கட்டமைப்புத்தான் மகளீராகிய நீங்கள். அதனூடாகத் தான் சிறுகச் சிறுக இந்தப் பணியை நீங்கள் செய்து கொள்வீர்கள் என்றால் முஸ்லிம் பகுதியைப் போன்று தமிழ் பகுதியும் இருக்கும்.

1983ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரும், முஸ்லிம்களும் எவ்வாறு ஒற்றுமையாக இருந்தவர்கள். நீங்களோ அல்லது நாங்களோ பிரிக்கவில்லை. இடையிலே வந்த இயக்கம் ஊடாக இனத்துவேசம் வரப்பப்பட்டு ஆயுதக் கலாச்சாரம் வந்தது.

விரும்பியவர்களை சுட்டார்கள், கடத்தினார்கள், எத்தனை கபளீகரம் நடாத்திவிட்டு இப்போது வெறுமனே இருந்து கொண்டு இருக்கின்றோம். இப்போதும் சொல்லுகின்றார்கள். நாங்கள் இறுதித் தீர்வை நோக்கி பயனிக்கின்றோம் என்று அது பாடையிலே போகின்ற இறுதி தீர்வா அல்லது அது வரும் வரை உங்களை எத்தனை காலத்திற்கு ஏமாற்றுவது, எத்தனை காலத்திற்கு நீங்கள் ஏழையாக இருப்பது சற்று சிந்தியுங்கள்.

நல்லதை தெரிவு செய்யும் நீங்கள் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு நல்லதொரு அரசியல் தலைவன் தேவை என்று ஏன் தெரிவு செய்வது கிடையாது. ஏன் நீங்கள் ஏமாற்றப்படுகின்றீர்கள் என்றால் நீங்கள் ஏமாளிகள் என்று அவர்கள் கருதுவதால் தான்.

நீங்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். உங்களை இலகுவில் ஏமாற்றிவிட முடியும் என்று நம்புகின்றார்கள். இதனால் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வீராப்பு வசனங்களை பேசி உங்களை மயக்கக் கூடிய வசனமான தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற நஞ்சை போட்டுவிட்டால் உடம்புக்குள் இலகுவாக பரவும் என்று தெரியும்.

கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் வேண்டும் என்று சொல்லுகின்றார்கள். வட மாகாணத்தில் அவர்கள் தான் முதலமைச்சராக இருக்கின்றார்கள். முழுக்க அமைச்சரவையாக அவர்கள் தான் இருக்கின்றார்கள். எதனை கிழித்து விட்டார்கள் என்று நீங்கள் பார்க்கவில்லையா.

அவர்களுக்கு எதனைக் கொடுத்தாலும் செய்யமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அவர்கள் அந்த நேரத்திற்கு செய்கின்ற விடயங்கள். இதிலே நீங்கள் தெளிவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

பிரதி அமைச்சரின் மகளீர் இணைப்பாளர் திருமதி.ஜெ.மீனா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதி அமைச்சரின் மாவட்ட இணைப்புச் செயலாளர் எஸ்.லோகநாதன், இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் மற்றும் சங்க பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்

.

 

Related Post