இந்தியாவின் தேச தந்தை மகாத்மா காந்தியை சுட்டுப் படுகொலை செய்த கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளான நேற்று இந்து மகாசபை வீரவணக்கம் செலுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தியை 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதியன்று துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தவன் கோட்சே. அவன் 1949ஆம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி தூக்கிலிடப்பட்டான். கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளான நேற்று நாடு முழுவதும் இந்துமகாசபை ‘வீரவணக்க’ நாளாக கடைபிடித்தது.
தமிழகத்திலும் இந்து மகாசபை பெயரில் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன. இது குறித்து இந்து மகாசபையில் தேசிய பொதுச்செயலர் முன்னா குமார் ஷர்மா கூறுகையில், மறக்கடிக்கப்பட்ட உண்மையான நாயகன் கோட்சே. அவரது சித்தாந்தங்கள் மக்களிடத்தில் சென்று சேர வேண்டும் என்பதற்காக தனி இணையதளத்தை தொடங்கியுள்ளோம் என்றார். இந்த அமைப்பின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் ஷர்மாவோ, கோட்சேயின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிக்கூட பாட புத்தகங்களில் இடம்பெற செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம் என்று கூறியுள்ளார். இந்து சேனா, மகாராண பிரதாப் சேனை போன்ற அமைப்புகளும் கோட்சே நினைவு நாளை அனுசரித்தன.