புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பெயரைக் கூறி திருட்டு முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றுமுன்தினம் காலை 10 மணியளவில் புன்னாலைக்கட்டுவன் தெற்கு ஈவினைச் சந்தியில் உள்ள ஐயனார் கோவில் ஆலயக் குருக்கள் வீட்டில் இந்த துணிகர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
நேற்றுமுன்தினம் காலை வீட்டுக் கதவினை மூட சென்ற பெண்ணை இடித்து தள்ளியபடி வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் உன்ர மகன் எல்.ரீ.ரீ நாங்கள் மகிந்தவின்ர ஆக்கள் கொள்ளையடிக்க வந்திருக்கிறம் என்று கூறியவுடன் அப் பெண் கூச்சலிட்டுள்ளார். உடனே பெண்ணை தள்ளி விழுத்தி வாய் மற்றும் கை கால்கைள் திருடர்கள் கட்டியுள்ளனர். வாயைக் கட்டும்போது பெண்ணைத் தாக்கி வாய்க்குள் துணியைத் திணித்துள்ளனர்.
இந்த வேளையில் வெளியில் சென்ற பெண்ணின் கணவர் வீட்டுக்குள் வந்த வேளை திருடர்களைக் கண்டவுடன் சத்தமிட்டுள்ளார். தம்மை சுதாகரித்துக்கொண்ட திருடர்கள் அவரைத் துரத்தி சென்று தாக்கியுள்ளனர். தாக்குதலிருந்து தப்பித்த வீட்டு உரிமையாளர் வெளியில் சென்று கூக்குரலிட அயலவர்கள் வந்து தப்ப முயன்ற திருடர்களை கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.
அதில் ஒருவர் தப்பியோட மூவரைப் பிடித்த பொதுமக்கள் அவர்களை சரமாரியாகத் தாக்கி சுன்னாகம் பொலிசில் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து கடந்த மாதம் புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் பூசகர் வீட்டில் இடம்பெற்ற திருட்டுடன் இவர்கள் தொடர்புடையதாக தெரியவருகிறது. இதேவேளை திருடர்களிடமிருந்து கத்தி, கயிறு, முகத்தை மறைக்கும் துணி ஆகியன மீட்கப்பட்டுள்ளன.