Breaking
Wed. Jan 15th, 2025

சமூக இடைவெளி மற்றும்  தேர்தல் தொடர்பான சுகாதார விதிமுறைகள் எதிர்க்கட்சிகளுக்கு மாத்திரமே பிரயோகிக்கப்படுவதாகவும், ஆளுந்தரப்பு அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல், சுயாதீனமாக தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரும்,  முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியாவில், இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கொவிட்-19 இன் உச்ச தாக்கம் இருந்தபோதும், முழுநேர ஊரடங்குச்சட்டக் காலத்திலும் ஆளுந்தரப்பு, தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதெனவும், பாதுகாப்புத் தரப்பினரும் அதிகாரிகளும் ஆளுந்தரப்பின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் ஒருவரின் மற்றொரு கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர்,

“பொதுத் தேர்தலில் பெரும்பான்மையின மக்களும், சிறுபான்மையின மக்களும் யதார்த்தத்தை புரிந்து வாக்களிக்க வேண்டும். நாட்டிலே அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, ஒற்றுமையாக வாழக்கூடிய, ஜனநாயகம் மிளிரும் வகையிலான, சிறந்ததொரு பாராளுமன்ற ஆட்சியை ஏற்படுத்த வாக்களிக்க வேண்டும்” என்றார்.

“சிறுபான்மைக் கட்சியான ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு’, கடந்த தேர்தலில் 16 ஆசனங்களைப் பெற்றிருந்தது. அதேபோன்று,  மக்கள் காங்கிரஸுக்கு இம்முறை தேர்தலில் அதிகளவு ஆசனங்கள் கிடைக்கப் பெற்றால், உங்களது எதிர்கால செயற்பாடுகள் எவ்வாறு அமையப்போகின்றன?” என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர்,

“கடந்த பாராளுமன்றத்தில், எமது கட்சியில் 05 உறுப்பினர்கள் பிரதிநிதித்துவம் செய்தனர். பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம், கடந்த காலங்களில் அரசியலில் நேர்மையாகவும், மனச்சாட்சியுடனும் பணியாற்றியிருக்கின்றோம். அத்துடன், எமது கட்சிக்கு ஆதரவளித்த மக்களுக்கு மட்டுமின்றி, ஏனையோருக்கும் நாம் பேதமின்றி சேவை செய்தோம். இனிவரும் காலங்களிலும் நாம் அதே கொள்கையுடனேயே கருமமாற்றுவோம்.

இந்தத் தேர்தலில் எமக்கு அதிகளவு ஆசனங்கள் கிடைக்குமென்ற நம்பிக்கை வலுவாக உண்டு. மக்கள் எமக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவார்கள். எதிர்காலத்தில் சிறுபான்மை மக்களின் தேவைகள், அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் உரிமை சம்பந்தமான பிரச்சினைகளில் நாம் தொடர்ந்தும் பணியாற்றவுள்ளோம்” என்றார்.

Related Post