அரச அதிகாரிகள், உதவிகளுக்காக தங்களை நாடி வரும் மக்களின் நிலைப்பாட்டை அறிந்து செயற்பட வேண்டும் என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
அரச திணைக்களங்களுக்கு இடையிலான விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (16) இடம்பெற்றது.
இந்தநிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
மலர்ந்திருக்கின்ற இந்த சமாதானத்திலே இந்த மாவட்டத்தில் வாழ்கின்ற கத்தோலிக்க, இந்து, இஸ்லாமிய மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள்.
அதேபோல் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து எதிர்நீச்சல் போட முடியாது தத்தளிக்கின்ற ஏழைகளுக்கு கைகொடுக்கின்றவர்களாக அரச அதிகாரிகள் எங்களை நாங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
அரச அதிகாரிகளிடத்தில் தமது தேவைகளுக்காக வருகின்றபோது அவர்களை மனிதாபிமானத்தோடும், இரக்க சிந்தனையோடும் நோக்குகின்ற மனப்பக்குவம் எல்லா உத்தியோகஸ்தர்களுக்கும் நிச்சயமாக தேவையானதொன்றாக இருக்கின்றது.
அரச உத்தியோகஸ்தர்கள் ஒரு பிரதேசத்திலே ஒரு சிலர்தான் இருக்கின்றார்கள். ஆனால், அதிகமான மக்கள் தமது தேவைகளுக்காக அரச அதிகாரிகளிடம் வருகின்றார்கள்.
இவ்வாறு வருகின்றவர்களுக்கான பணிகளைச் சரிவர செய்வதற்காகத்தான் மக்களுடைய பணத்திலிருந்து அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு உரிய சம்பளம் கொடுக்கப்படுகின்றது.
இந்த நிலையில், தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மக்கள் அதிகாரிகளிடத்தில் வர வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது என தெரிவித்தார்.
எனவே அதிகாரிகள், வருகின்ற மக்களின் நிலைப்பாட்டை புரிந்து கொண்டு இதய சுத்தியுடன் சேவை செய்ய வேண்டும் என மேலும் றிஸாட் பதியுதீன் வலியுருத்தியமை குறிப்பிடத்தக்கது.