ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட, மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வரவு செலவுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் எனத் தெரிவித்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக, கல்விக்கு முதன்மை இடம் வழங்கப்படும் எனவே பொய்யான பிரசாரங்களுக்கு ஏமார வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.
நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பாக கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் வீண் செலவுகளுக்கே வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டது. ஊழல் மோசடிகள் தலைவிரித்தாடின.
அதேவேளை மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படவில்லை. மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
ஆனால் புதிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தையே மக்களின் தேவைகளை நிறைவேற்றும், மக்களுக்கு சலுகைகளை வழங்கும், மக்களின் சார்புத் தன்மையான வரவு செலவுத் திட்டமாக இம்முறை அரசு முன்வைக்கும் என்றார்.
அதேவேளை 2016 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இவ் வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 18,590 கோடி ரூபா நிதி அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருவதோடு, கடந்த 2015 ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைவிட அதிக நிதி அடுத்த வருடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேசிய பாதுகாப்பிற்கு முதலிடம் வழங்கப்படும் 30,600 கோடி ரூபா தேசிய பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கான செலவு ஒதுக்கீடு இம்முறை குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை சுகாதாரத்துறைக்கும் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் 2016 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.