Breaking
Fri. Jan 10th, 2025

மக்களுக்கு சேவை செய்வதே எமது தலையாய கடமை என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும், அதிகாரிகளும் மனதிற்கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனையில் நேற்று (19) இடம்பெற்ற அசம்பாவித சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியதாவது,

“தங்களது எதிர்காலத்துக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடி உயிர்நீத்த இளைஞருக்கும், பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பொலிஸாரின் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவை நிறுத்தப்பட வேண்டும். அத்துடன், குறித்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.

குறித்த, மக்கள் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குறைந்தபட்ச படையணியினாலேயே ஓர் உயிர் காவுகொள்ளப்பட்டிருக்கின்றது என்றால், அதிகபட்ச படைகளை பயன்படுத்தி இருப்பின் என்ன நேர்ந்திருக்கும்?

ஆகையால், மேற்படி சம்பவத்தின் பின்புலத்தில் அரசியல் சக்திகள் இருந்தால், அதனையும் தீரவிசாரித்து, கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்று கூறினார்.

Related Post