Breaking
Mon. Dec 23rd, 2024

தமக்குரிய காணிகளை ஜி. பி. எஸ். (GPS) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வனப் பிரதேசமாக பிரகடனப்படுத்த 2012 ல் வெளியிடப்பட்டுள்ள வர்த்த மானிக்கு எதிராக மரிச்சுக்கட்டி, பாலக்குழி, கரடிக்குளி மற்றும் முள்ளிபுரம் ஆகிய மக்கள் நீதிமன்றம் செல்லவிருப்பதாக கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் நேற்றுத் தெரிவித்தார்.

ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் நேற்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் வில்பத்து விளாந்திபுரம் இந்நாட்டு மக்களின் ஒருபெரும் சொத்து அது சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல இந்நாட்டில் வாழுகின்ற தமிழ், முஸ்லிம் மக்களுக்குரிய ஒரு சொத்து.

இதனைப் பாதுகாக்கும் பொறுப்பு தெற்கிலுள்ள மக்களை விடவும் மரிச்சுக்கட்டி, பாலக்குழி, முள்ளிகுளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கே அதிகமுள்ளது. அவர்கள் தான் இவ்வனத்தை காலா காலமாகப் பாதுகாத்து வந்தார்கள்.

ஆனால், சமாதானம் ஏற்பட்ட பின்னர் கொழும்பில் இருந்து கொண்டு ஜீ.பி.எஸ். (GPS) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எவருக்கும் தெரியாத வகையில் 2012ம் ஆண்டில் 6050 ஹெக்டேயர் காணியை மரிச்சுக்கட்டி, கரடிக்குழி வனம் என அமைச்சருக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தியுள்ளனர். ஆனால், இது சட்டப்படி பிழையான நடவடிக்கை.

பொதுவாக ஒரு பிரதேசத்தை வனப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்துவதாயின் அது தொடர்பாக முதலில் பிரதேச செயலாளருக்கும், மாவட்ட செயலாளருக்கும் அறிவிக்க வேண்டும். அது குறித்து அப்பிரதேச மக்களுக்கு அறிவூட்டவேண்டும். அப்பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அது தொடர்பான அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

அது குறித்து எவராவது எதிர்ப்புத் தெரிவிப்பதாயின் அது குறித்து மக்களுக்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படவேண்டும். நீதிமன்றம் செல்வதாயின் அதற்கும் இடமளிக்க வேண்டும். இவை எதற்கும் இடமளிக்கப்படாது இந்நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

1990ல் வட மாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டபோது இங்கு வாழ்ந்த முஸ்லிம்களும் வெளியேறினர். அதனால், அவர்கள் 23 வருடங்கள் தம் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாதபடி அகதி முகாம்களில் வாழ்ந்தனர். அதனால் அவர்களது காணிகள் காடாகி காணப்பட்டன.

இந்த சந்தர்ப்பத்தில் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பார்த்தால் அது காடாகவே தென்படும். அதற்காக அது வனப்பிரதேசம் என தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சர் வர்த்தமானி வெளியிட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த செயலையும், இது தொடர்பான வர்த்தமானியையும் நாம் முழுமையாக எதிர்க்கின்றோம்.

இந்த வர்த்தமானிக்கு எதிராக நீதிமன்றம் செல்ல இங்கு வாழும் மக்கள் தயாராகி வருகின்றார்கள். திருட்டு தனமாக வர்த்தமானி பிரகடனத்தை வெளியிட்டு விட்டு எமது மீள்குடியேற்றத்தை பிழையாகவும், மோசமான நடவடிக்கையாகவும் சித்தரிப்பதால் நாம் பெரிதும் வேதனை அடைந்துள்ளோம். நாம் காடுகளை ஆக்கிரமிக்கும் சமூகத்தினர் அல்லர். உண்மையை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். – என்றார் அமைச்சர் றிஷாத்.

Related Post