Breaking
Thu. Dec 26th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் பிரிவுக் கிளைகள் அக்கரைப்பற்று முதலாம் குறிச்சி மற்றும் அக்கரைப்பற்றின் தமிழ்ப்  பிரதேசமான ஆலையடிவேம்பு ஆகிய இடங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை தலைமையில் இடம்பெற்ற இந்த அங்குரார்ப்பண வைபவங்களில் நூற்றுக்கணக்கான தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்கள் பங்கேற்றிருந்தனர்.

அக்கரைப்பற்று முதலாம் குறிச்சியில் இடம்பெற்ற மகளிர் பிரிவுக் கிளை அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்ட பெண்கள், அக்கரைப்பற்றில் மக்கள் காங்கிரஸின் நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்கு தாங்கள் உறுதிபூண்டுள்ளதாகவும், தற்போது முஸ்லிம் அரசியலில் கால் பதித்துள்ள முஸ்லிம் கட்சிகளில், மக்கள் காங்கிரஸ் மட்டுமே மகளிருக்கென தனியான பிரிவொன்றை ஆரம்பித்து, பெண்களின் விடிவுக்கான செயல்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தனர். அந்த வகையில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பெண்களும் இந்த கட்சியுடன் இணைந்து கட்சியை வளர்ப்பதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தனர்.

ஆலையடிவேம்பிலும் தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்த பெண்களைக் கொண்ட மகளிர் பிரிவுக் கிளையொன்று ஆரம்பிக்கப்பட்டது. அக்கரைப்பற்று தமிழ்ப் பிரதேசத்தில் மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் உதவியினால் வழங்கப்பட்ட மினி ஆடைத் தொழிற்சாலை, அந்தப் பிரதேச யுவதிகளின் வாழ்வை வளம்படுத்துவதற்கு உதவி வருவதையும் கூட்டத்தில் கலந்துகொண்ட அந்தப் பிரதேச மகளிர் அமைப்புக்களின் தலைவர்கள் தெரிவித்ததோடு, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு தமது நன்றிகளையும் வெளிப்படுத்தினர்.

அக்கரைப்பற்று முதலாம் குறிச்சியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் ஹஸ்மியா, சமுதாயத்தில் பெண்களின் பாரிய பங்களிப்பைப் பற்றியும், குடும்பச் சுமையும், பல்வேறு காரணிகளும் அவர்களின் அன்றாட குடும்பச் செயற்பாடுகளில் பாரிய தாக்கங்களை உருவாக்கி, அவர்களுக்கு மன அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனாலேயே குடும்பத்தில் பிணக்குகளும், பிளவுகளும் ஏற்பட்டு பெண்கள் அவல நிலைக்கு தள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.  

அவர் மேலும் கூறியதாவது,

சிறுபான்மைக் கட்சிகள், பெயருக்காக பெண்களுக்கு பதவிகளையும் பொறுப்புக்களையும் வழங்கி, அவர்களை உரிய இலக்கை நோக்கி இயங்கவிடாமல் மழுங்கடிக்கும் செயற்பாடுகளே அதிகம் காணப்படுகின்றது. அந்தக் கட்சிகளில் உள்ள பெண்களின் முக்கியஸ்தர்கள் தமது தலைவனை  புகழ் பாடுபவர்களாக மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு வருகின்றனர்.  இதற்கு மாற்றமாக மக்கள் காங்கிரஸ், மகளிருக்கு உரிய அந்தஸ்தையும், கௌரவத்தையும் வழங்கி உள்ளது. அத்துடன் பெண்களின் வாழ்வில் ஒளியூட்டும் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றது. வெறுமனே வாக்குகளை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு பெண்களை கறிவேப்பிலையாகவும், பகடைக்காய்களாகவும் பாவிக்கும் கலாச்சாரத்தை எமது கட்சி விரும்பவில்லை. இந்த நிலையை நாம் மாற்றி அமைத்துள்ளோம். அறிக்கைகளால் மட்டும் தமது கட்சித் தலைவர்களை புகழ்ந்துகொண்டும், துதிபாடிக்கொண்டும் நாம் இருக்க முடியாது. செயற்றிறனைக் கொண்ட ஓர் அணியாக நாம் இயங்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த சமூக சேவையாளர் ஷஹீட் ஹாஜியார் மற்றும் கம்பஹா மாவட்ட மக்கள் காங்கிரஸின் மத்திய குழுத் தலைவரும், மினுவாங்கொடை அமைப்பாளருமான டாக்டர் எம்.எச். முனாஸிக் உட்பட பல பிரமுகர்கள் பங்கேற்று உரையாற்றினர்.  

 

 

Related Post