-ஊடகப்பிரிவு-
காத்தான்குடியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் காரியாலயம் தீக்கிரையாக்கப்பட்டமை ஒரு மிலேச்சத்தனமான செயலென்றும், இந்த நாசகார செயலில் ஈடுபட்டோரைக் கைது செய்ய உடன் நடவடிக்கை எடுக்குமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காத்தான்குடியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முதன்மை வேட்பாளரும், ஊடகவியலாளருமான ரீ.எல்.ஜவ்பர் கானின் கட்சிக் காரியாலயம் இன்று அதிகாலை (27) தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்தே, அமைச்சர் இவ்வாறான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளர்.
இந்தச் செயல் தொடர்பாக பொலிஸ் உயரதிகாரியுடன் தொடர்புகொண்ட அமைச்சர் ரிஷாட், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களைக் கைது செய்யுமாறும், அந்தப் பிரதேசத்திலுள்ள தமது கட்சிக் காரியாலயங்களுக்குத் தக்க பாதுகாப்பு வழங்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
கிழக்கில் மக்கள் காங்கிரஸின் எழுச்சியைப் பொறுக்கமாட்டாத தீய சக்திகள், திட்டமிட்டு இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று குற்றஞ்சாட்டிய அவர், எத்தனை தடைகள் வந்தாலும் எமது அரசியல் நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்றும் கூறினார்.