Breaking
Sun. Jan 5th, 2025

மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களுக்குப் பிறகு அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தனிமனித ஆளுமையாக, தான் சார்ந்த மக்களின் உரிமை அரசியலை மட்டுமின்றி அபிவிருத்தி அரசியலையும் எவ்வாறு வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார் என்பதை வடபகுதிக்குச் சென்று பார்க்கும் போதுதான் தெரிகிறது என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்தாஹிர் தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகத்தின் சமகால அரசியல் நகர்வு மற்றும் மாற்று அரசியல் தொடர்பான கலந்துரையாடலொன்று, இளைஞர்கள் மற்றும் மீனவ சமூகத்தின் பங்குபற்றுதலோடு இரண்டு கட்டங்களாக நேற்று (24) நிந்தவூர் எஸ்.எச்.அஹமட் காடனில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தவிசாளர் தாஹிர் கூறியதாவது,

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது அமைச்சுப் பொறுப்புக்களுக்கு அப்பால் சர்வதேச சமூகத்தினரதும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனவந்தர்களினதும் உதவிகளைப் பெற்று இன, மத பேதங்களுக்கு அப்பால் வடபுல மக்களுக்கு பெரும் சேவையாற்றி வருகிறார்.

ஆயிரக்கணக்கான வீடுகளை அமைத்து, நூற்றுக்கணக்கான மீள்குடியேற்றங்களை செய்துள்ளார். ஆயிரக்கணக்கான வாழ்வாதார வசதிகளையும் தொழில் வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். பாரிய நிதியொதுக்கீடுகளில் பெளதீக மற்றும் உள்கட்டமைப்பு சேவைகளை செய்துகொடுத்துள்ளார்.

இதன் பிரதிபலிப்பே அவர் தலைமை தாங்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் துரித வளர்ச்சியாகும். அந்தவகையில், தனி தமிழ் பிரதேசமான மாந்தை மேற்கு பிரதேச சபையை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான கட்சி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல தசாப்த தொன்மையான தியாகங்களாலும் போராட்டங்களாலும் வளர்த்தெடுத்த, நமது சமூகம் சார்ந்து இயங்கும் கட்சிகளின் பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கைகளை, மிகவும் குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்ட கட்சியால் எட்டமுடிகிறது என்றால் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தனிமனித ஆளுமையும் சேவைகளுமே அதற்குக் காரணமாகும்.

ஆனால், நாம் நிலமாக, விதையாக, நீராக நின்று வளர்த்த கட்சியும் அதன் தலைமையும் நமது வாக்குகளைப் பெற்று கண்டியிலும் அக்குறணையிலும் செய்யும் சேவைகளில் ஒரு சிறு பகுதியேனும் நமது பிரதேசங்களுக்கு கடந்த காலங்களில் செய்துள்ளனரா? என்றால் அது கேள்விக்குறியே. அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நமது மாவட்டத்திற்கு வருகை தந்ததன் பின்னரே சில வேலைத்திட்டங்களை செய்யப்போவதாக அறிக்கை விடுகின்றனர். இவ்வாறான அறிக்கைகளை கண்டும் கேட்டும் புளித்துப்போய்விட்டது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சேவைகளை எவ்வாறு வடபகுதியில் மக்கள் அனுபவிக்கின்றனரோ, அதேபோன்று  நாமும் அவரின் சேவைகளைப் பெற்றுக்கொள்ள தயாராக வேண்டும்.

நாம் நிந்தவூர் பிரதேச சபையில் ஆட்சியமைத்த பின்னர், பல கோடி ரூபாய்களை நமது பிரதேச அபிவிருத்திகளுக்காக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஒதுக்கியுள்ளார். அதற்கு நாம் என்றும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் ஜூனைடீன் மான்குட்டி, நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள் மற்றும் பெருந்திரளான இளைஞர்கள் உட்பட  மீனவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

-எம்.ஏ.எம் முர்ஷித்-

Related Post