Breaking
Mon. Jan 13th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், எங்கள் மீது அபாண்டங்களை அள்ளி வீசுகின்றனர் என்று திகாமடுல்ல மாவட்ட முதன்மை வேட்பாளர் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.

திகாமடுல்ல மாவட்டத்தில், மக்கள் காங்கிரஸின், மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் வை.கே.ரஹ்மானை ஆதரித்து, மருதமுனையில் நேற்று முன்தினம் (19) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு கூறினார்.

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகப் பங்கேற்ற குறித்த கூட்டத்தில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய முதன்மை வேட்பாளர் வை.எல்.எஸ்.ஹமீட் மேலும் கூறியதாவது,

“அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுவதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிராஸுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவதை எதிர்த்தவர்கள், அம்பாறை மாவட்டத்தில் இணைந்து போட்டியிட வரவில்லை என்று கூறி, ஏதோ முஸ்லிம்களின் உரிமைக்கு உலை வைத்தது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.

இந்நிலையில், ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும், இந்த விடயத்தில் நாங்கள் பேச்சுவார்த்தை நடாத்திய காலம் கொரோனாவுக்கு முந்திய காலம். ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தல் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்த்த நிலையில் நடந்தது. அந்தக் காலத்தில் தேசிய காங்கிரஸ் மொட்டில் கேட்பதாக இருந்தது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து டெலிபோனில் கேட்டால், மொட்டில் நான்கு ஆசனத்தை பெறுவதற்கு வழி இல்லை என்பதற்கு, நாங்கள் தெளிவான புள்ளி விவரங்களை வழங்கினோம். ஆனால் போலிப் பிச்சாரங்களை இவர்கள் முன்வைக்கின்றார்கள். என்றாலும் மக்கள் உண்மை நிலையை அறிந்துள்ளார்கள்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மூலம், திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றியீட்டும் போது, அதுவே முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் வென்று பாராளுமன்றம் சென்றதாக சொல்ல முடியும். மாறாக ஐக்கிய மக்கள் சக்தியில் வென்றால், அவர்களுக்கு நேரடியாக முஸ்லிம் கட்சியின் மூலம் பாராாளுமன்றம் சென்ற பிரதிநிதித்துவம் என்று கூற முடியாது.

எனவேதான், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றியை இன்று உறுதி செய்ய முன்வந்து, நாளுக்கு நாள் எமது கட்சியின் பக்கம் மக்கள் அணிதிரண்டு வருகின்றனர்.

எமது கட்சியில், எமது தலைமையின் கீழ், களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் பாராளுமன்றம் செல்கின்ற போது, சவால் மிக்க பாராளுமன்றத்தில், எமது சமூகத்திற்கான குரலாக இயங்குவார்கள் என்பதை மனதில் கொண்டு, எமது மக்கள் இம்முறை தேர்தலை பயன்படுத்த வேண்டும்” என்றார்.

Related Post