Breaking
Thu. Dec 26th, 2024

-ஊடகப்பிரிவு-

மக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் ஒவ்வொரு வாக்குகளையும் உங்களின் வாழ்வுக்கும், எதிர்கால செழிப்புக்கும், சமூக அபிவிருத்திக்குமான முதலீடாக எண்ணுங்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர்  ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (09) புல்மோட்டையில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர் உரையாற்றிய போது கூறியதாவது,

தேர்தலுக்காக மட்டும் வந்து நீங்கள் போடுகின்ற மாலைகளை கழுத்திலே சுமந்துகொண்டு, வீரவசனங்கள் பேசிவிட்டு மீண்டும் அடுத்த தேர்தலுக்கு வந்து வாக்குக் கேட்பவர்கள் நாங்கள் அல்லர். தேர்தல் காலங்களிலே நாங்கள் கொடுத்த வாக்குகளை முடிந்தளவு நிறைவேற்றியே இருக்கின்றோம். அந்த வகையில் புல்மோட்டை பிரதேசத்திற்கும் எங்களாலான உதவிகளையும், அபிவிருத்திகளையும் மேற்கொண்டிருக்கின்றோம்.

புல்மோட்டைப் பிரதேசத்திலுள்ள இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கும் போது, அதனை வழங்கவிடாது ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும்  கடந்த காலங்களில் பலர் நடத்தியிருந்தனர். அரசியல் எதிரிகளும் அரசியல் நரிகளும் இந்தப் பிரதேசத்தில் தமது இருப்புக்கு பாதகம் ஏற்படும் என்ற அச்சத்தில், எமது கட்சியின் இந்தப் பகுதிக்கான மக்கள் சேவையைத் தடுத்து நிறுத்த என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்கின்றார்கள்.

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்குவதிலும், கூட்டுத்தாபனத்தின் புதிய ஊழியர்களை நியமிப்பதிலும் எமக்கு முட்டுக்கட்டைகள் ஏற்பட்ட போதும், அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி நாம் எடுத்த முயற்சியை செயற்படுத்தினோம்.

என்னை அரசியலிலிருந்து ஓரங்கட்ட எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எமது அமைச்சுப் பதவியை பறித்தெடுப்பதற்கும், என்னை வீட்டுக்கு அனுப்புவதற்கும் இனவாதிகளும் நமது சமூகம் சார்ந்த அரசியல் காழ்ப்புணர்வு கொண்டோரும் பாடாய்ப்பட்டு திரிகின்றனர்.

ஆனால், இறைவன் எங்களுடன் இருப்பதனாலும், சமூகத்துக்கான நேர்மையான பணியை நாம் தொடர்வதாலும், அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாதுள்ளது. நாளாந்தம் அரசியல் சூழ்ச்சிகளை மேகொண்டு எம்மைக் கவிழ்த்துவதற்கு, அவர்கள் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்ற போதும், அவர்களுடைய திட்டங்கள் தோல்வியையே தழுவி வருகின்றன.

முகநூல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் என்னைப்பற்றிய புதுப்புதுக் கதைகளை கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர். கிழக்கிலே எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மக்கள் ஆதரவைக் கண்டு திக்கிமுக்காடி நிற்கும் சிலர், இல்லாத பொல்லாத கதைகளைக் கூறி எமது ஆதரவைக் குறைப்பதற்கான சதித் திட்டங்களை மேற்கொள்வதோடு, மக்கள் மத்தியிலே நாம் கூறும் கருத்துக்களை திரிவுபடுத்தி வெளியிடுகின்ற ஒரு கேவலமான நிலை ஏற்பட்டுள்ளது.

நாங்கள் அரசியலை அரசியலாகவே மேற்கொண்டு வருகின்றோம். தூய்மையான பாதையிலேயே பயணிக்கின்றோம். இந்த பயணத்திலே உங்களையும் பங்காளராக்கிக் கொள்ளுங்கள் இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறினார்.

 

 

 

 

Related Post