Breaking
Sat. Nov 23rd, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்குடா இளைஞர் அணியினர் நடாத்திய விளையாட்டு விழாவின் இறுதிப்போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (30.09.2018) இரவு ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்குடா இளைஞர் அமைப்பால், பிரதேச இளைஞர்களின் விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்யவும், போதையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கும் நோக்கிலும் கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு வேலைத்திட்டங்களை நடாத்தி வருகின்றது. அதன் அடிப்படையிலேயே கழகங்களுக்கிடையில் உதைப்பந்தாட்ட போட்டியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டார குழுக்களுக்கிடையில் கயிறு இழுத்தல் போட்டியையும் நடாத்தியது.

டாக்டர் ஏ.ஏ. அப்தாப் அலி தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியூதீன் கலந்துகொண்டதுடன், கௌரவ அதிதியாக பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன், அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக கட்சியின் செயலாளர் நாயம் எஸ்.சுபைதீன், கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முஷர்ரப், கட்சியின் பிரதேச சபை தவிசாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

உதைப்பந்தாட்ட போட்டியில் எட்டு கழகங்கள் பங்கு பற்றியதுடன் சுழற்சி சுற்றில் பணிரெண்டு போட்டிகள் இடம்பெற்றதுடன், அரையிறுதிப் போட்டிக்கு வாழைச்சேனை அல்/அக்ஷா விளையாட்டு கழகமும் ஓட்டாவடி யங்லைன்ஸ் விளையாட்டு கழகமும் கலந்துகொண்டதில் ஓட்டாவடி யங்லைன்ஸ் விளையாட்டு கழகம் வெற்றிபெற்றது அதேபோல் வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகமும் ஓட்டமாவடி வளர் பிறை விளையாட்டு கழகமும் போட்டியிட்டு அதில் ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டு கழகம் வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டிக்கு தெரிவான ஓட்டாவடி யங்லைன்ஸ் விளையாட்டு கழகமும் ஓட்டமாவடி வளர் பிறை விளையாட்டு கழகமும் கலந்துகொண்டதில் போட்டி நேரத்தில் எந்த கழகங்களும் கோல்களை போடாததால் போட்டியில் முடிவு காண்பதற்காக “பினால்டி” முறை வழங்கப்பட்டு அதில் ஓட்டமாவடி வளர் பிறை விளையாட்டு கழகம் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

இதேபோன்று கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இருபத்தொரு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட்டாரக்குழுக்கிடையில் கயிறு இழுத்தல் போட்டி நடாத்தப்பட்டது. இதில் இறுதிப்போட்டிக்கு மீறாவோடை வட்டார அணியும் பிறைந்துரைச்சேனை வட்டார அணியும் தெரிவாகி அதில் பிறைந்துரைச்சேனை வட்டாரக்குழு வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

உதைப்பந்தாட்ட போட்டி தொடரின் சிறந்த பந்து காப்பாளராக வளர்பிறை விளையாட்டு கழக உறுப்பினர் உவைஸ் சப்ரானும் சிறந்த விளையாட்டு வீரராக யங்லைன்ஸ் விளையாட்டு கழக உறுப்பினர் எல்.ரீ.எம்.சித்தீக்கும் சிறந்த தொடர் ஆட்ட நாயகனாக நியூ ஸ்டார் விளையாட்டு கழக உறுப்பினர் எஸ்.எம்.இம்ரானும் தெரிவு செய்யப்பட்டு நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதேவேளை விளையாட்டு துறையில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயம் மற்றும் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதியும் கௌரவிக்கபட்டனர்.

-எஸ்.எம்.எம்.முர்ஷித்-

Related Post