-ஊடகப்பிரிவு-
கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகர சபை, கொலொன்னாவை பிரதேச சபை, கொட்டிகஹவத்த – முல்லேரியா பிரதேச சபை ஆகியவற்றில், மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குவதற்கான கட்டுப்பணத்தை இன்று மாலை (18) செலுத்தியது.
மேல்மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான ஏ.ஜே.எம். பாயிஸ் தலைமையில், குறிப்பிட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தெரிவித்தார்.
கட்டுப்பணம் செலுத்தியதன் பின்னர் மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொழும்பு மாவட்டத்தில் தனித்துக் களமிறங்குவது முதன்முறையானது அல்ல. கடந்த மேல்மாகாண சபைத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் தனித்து, தனது மயில் சின்னத்தில் போட்டியிட்டு, பல்லாயிரக்கணக்கான வாக்குகளைப் பெற்று மாகாண சபைக்கு உறுப்பினர் ஒருவரைப் பெற்றுக்கொண்டதை நான் நினைவூட்ட விரும்புகின்றேன்.
ஆட்சியின் பங்காளிக் கட்சியான மக்கள் காங்கிரஸ், சமூக நலனை அடிப்படையாகக் கொண்டே, தனது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. எமது தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில், நாம் நேரிய பாதையில் பயணிக்கின்றோம். எமது கட்சி வடக்கில் தோற்றம் பெற்ற போதும், நாடளாவிய ரீதியில் தற்போது வியாபித்து மக்கள் பணியாற்றி வருகின்றது.
கொழும்பிலோ வேறு எந்தவொரு பிரதேசத்திலோ சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால், அதற்காக குரல் கொடுப்பது மாத்திரமின்றி, சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவருவதில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னின்று செயற்படுபவர். அது மட்டுமின்றி கொழும்பிலோ அல்லது வேறு பகுதிகளிலோ அனர்த்தங்கள் ஏதும் நிகழ்ந்தால், கைகொடுத்து உதவி செய்பவரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே.
எனவே, கொழும்பு மாவட்ட மக்கள் எமது கட்சிக்கு கணிசமான வாக்குகளை வழங்கி, அமைச்சரின் கரத்தை பலப்படுத்துவார்கள் என நாம் பெரிதும் நம்புகின்றோம் என தெரிவித்தார்.