அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம், சமூகப் பிரச்சினைகளை வென்றெடுக்க முடியும் என மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளரான அப்துல்லாஹ் மஹ்ரூப், நேற்று முன்தினம் (09) கந்தளாயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது,
திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், எமது உரிமைகளைப் பாதுகாத்து, வென்றெடுக்கக் கூடிய மக்கள் பிரதிநிதிகளை நாடாளுமனறம் அனுப்ப வேண்டிய தேவைப்பாடு உள்ளது. இதனை எமது சமூகம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப சிந்தித்து கருமமாற்ற வேண்டும்.
ஒரு நாள் தோன்றி, ஒரு நாளிலே மறைந்து போன சஹ்ரான் எனப்படும் அந்தப் பயங்கரவாதியை, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுடன் தொடர்புபடுத்தி, அவர் மீது இல்லாதபொல்லாத குற்றங்களைச் சுமத்தி, பல மணி நேரம் விசாரணை செய்கின்றார்கள். வீண்பழி சுமத்தி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அவரின் குரலை நசுக்க முற்படுகிறார்கள்.
இப்படியான இழி செயல்களை இல்லாமல் ஆக்க, ஆகஸ்ட் 5ஆம் திகதிக்குப் பிறகு, மக்கள் காங்கிரஸிலிருந்து, எட்டுக்கும் குறையாத ஆசனங்களைப் பெற்று, பலம் மிக்க ஒரு அணியாக, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும்.
ஆகையால், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்துக்கு, நீங்கள் வாக்களிப்பதன் மூலமே, நாம் இந்தப் பலத்தைப் பெற்றுகொள்ள முடியும்” என்றார்.