Breaking
Wed. Jan 15th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதின், கடந்த 22, 23 ஆம் திகதிகளில் அம்பாறைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததுடன், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில், மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்த மக்கள் கருதரங்கு மற்றும் வேட்பாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்களுடனான விசேட சந்திப்புக்களிலும்  கலந்துகொண்டார்.

அதன் ஓர் அங்கமாக, கடந்த செவ்வாய்க்கிழமை (23) மாவடிப்பள்ளிக்கு விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவரை வரவேற்று, கௌரவிக்கும் நிகழ்வொன்றை, கட்சியின் மாவடிப்பள்ளி மத்திய குழுவினர் மற்றும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.ஜலீல் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இந் நிகழ்வில், கடந்த பல வருடங்களாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியோடு பயணித்த 04 மாதர் சங்கங்களும், அதன் இருநூறுக்கும் மேற்பட்ட பெண் உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்  முன்னிலையில், கட்சியில் இணைந்துகொண்டனர்.

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் கரங்களை பலப்படுத்துவதன் மூலமே, சமூக நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனவும், மாவடிப்பள்ளி பிரதேசத்தில் பலகோடி ரூபா பெறுமதியான அபிவிருத்திகளுக்கு நிதிகளை வழங்கி, தமது ஊரை கௌரவப்படுத்தியுள்ள கட்சியையும், தலைமையையும் பலப்படுத்துவதற்காகவே கட்சியில்  இணைந்துகொண்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில், மு.கா வில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் ஒருவரும் கட்சியில் இணைந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வில், கட்சியின் தவிசாளர் அமீர் அலி, தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப், செயலாளர் சுபைர்தீன், பொருளாளர் ஹுசைன் பைலா மற்றும் வேட்பாளர்களான முஷாரப், மாஹிர், ஜவாத் உட்பட  கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
– அஹமட் சாஜித் –

Related Post