Breaking
Mon. Dec 23rd, 2024

சுயாதீன மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரும் மூத்த அரச நிர்வாகியும் மனித நேயமுள்ளவருமான வே.சிவஞானசோதி, இறைபதமடைந்த செய்தியால், கடும் கவலையுற்றுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் கூறியுள்ளதாவது,

“நண்பர் சிவஞானசோதி, நாடறிந்த அரச நிர்வாகி. செய்யும் தொழிலே தெய்வம் என்கின்ற தத்துவத்தை அவரது சேவையில் காண முடிந்தது. வேறுபாட்டுச் சிந்தனைகள் அவரது அரச பணியில் இருந்தது கிடையாது. எவ்வளவு பெரிய, எத்தனை சிறப்புடைய பதவிகளை அவர் வகித்த போதும், செருக்குத்தனமின்றிக் கடமையாற்றிய கண்ணியவானாகவே அவரை நான் பார்க்கிறேன்.

போருக்குப் பின்னர் மக்களுக்குச் செய்ய வேண்டியிருந்த சகல கருமங்களையும் களத்தில் நின்று சாதித்தவர் அவர். மீள்குடியேற்றம் என்பது, வார்த்தைகளால் சொல்லிவிட்டு வாளாவிருந்து விடுவதல்ல. மக்களின் நாளாந்த வாழ்நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுவதே இதில் பிரதானம். இத்தனையையும் இலகுவாகச் செய்து முடிக்க அமரர் சிவஞானசோதி அரும்பாடுபட்டார்.

அப்பலோ வைத்தியசாலையில் அண்மையில் அவரைக் காணக் கிடைத்தது. அவரது மனைவியார் சக்கரநாற்காலியில் வைத்தவாறு சிவஞானசோதியை தள்ளிக்கொண்டு வந்தார். நன்கு மெலிந்திருந்த அவரது தோற்றத்தைக் கண்டு நான் கவலையடைந்தேன். அவர் என்னை அடையாளங்காணவில்லை. என்றாலும், நானே அவர் அருகில் சென்று, “சிவஞானசோதியா நீங்கள்?” எனக்கேட்டுவிட்டு, சுகம்விசாரித்துவிட்டு வந்தேன். ‘மிக விரைவில் குணமடைந்து விடுவேன்’ என்று அவர் என்னிடம் கூறினார். ஆனால், ஒருவாரம் கடந்த பின்னர் அவரது மரணச் செய்தியே எனக்கு கிடைத்தது. என்ன செய்வது, காலம் வந்தால், இவ்வாறுதான் நாமும் ஒரு நாள் காவுகொள்ளப்படுவோம்.

அவரது இழப்பால் துயருறும் அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று கூறினார்.

Related Post