Breaking
Tue. Nov 19th, 2024
மட்டக்களப்பு கெம்பசை “கொரோனா வைரஸ்” தடுப்பு முகாமாக மாற்றியிருப்பதானது, சிறுபான்மைச் சமூகத்தை பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கெம்பசை கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றியிருப்பது குறித்து , ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“மட்டக்களப்பு கெம்பசை, கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றியிருப்பதானது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
இந்த மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியை அரசாங்கம் கையகப்படுத்தி, அதில்  பல்கலைக்கழகக் கல்லூரி ஒன்றை ஆரம்பித்திருந்தால் எந்த மறுப்பும் யாரும் சொல்வதற்கில்லை. ஆனால், ‘அந்தப் பல்கலைக்கழகத்தை கையகப்படுத்துகின்றோம்’ என்ற அடிப்படையில், கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றும் நடவடிக்கையானது, மிகவும் கவலைக்குரியதும் கண்டனத்துக்குரியதுமான விடயமாகும்.
இந்த நாட்டில் போதுமான இடவசதிகளைக் கொண்ட பல இடங்கள் இருந்தபோதிலும் கூட, கிழக்கை குறிப்பாக, மட்டக்களப்பை பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றதா? என்ற சந்தேகம், இந்த மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரோடு பேசிய போது, “இது ஒரு தற்காலிக ஏற்பாடு” என அவர் கூறியிருந்தார். எனினும், இந்தப் பிராந்தியத்தில் வசிக்கின்ற மக்களின் மனோநிலைக்கு முற்றிலும் பாதகமான செயற்பாடாகவே, இந்த நடவடிக்கை உள்ளது.
இந்த அரசாங்கம், இவ்வாறானதொரு காலகட்டத்தில், சிறுபான்மைச் சமூகத்தைப் பழிவாங்கும் செயற்பாடுகளை செய்யக் கூடாது என்பதே, எமது வேண்டுகோளாகும். இது ஒரு தனிநபர் பிரச்சினையல்ல. இந்தப் பிராந்தியத்தில் வாழுகின்ற அனைத்து சமூகங்களினதும் பிரச்சினையாகவே இந்த விடயம் காணப்படுகின்றது.
எனவே, இதனை தடுப்பதற்காக இந்தப் பிராந்தியத்திலுள்ள அனைத்து சமூகத்தினரினதும் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” என்றார்.

Related Post