Breaking
Thu. Dec 19th, 2024

-முர்ஷிட்-

மட்டக்களப்பு மாவட்டம் கடந்த ஆட்சிக் காலத்தில் வறுமையில் மூன்றாவதாக காணப்பட்டது. ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் தற்போது வறுமை ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சு பதவி மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டதன் மூலம் மாவட்டத்தின் வறுமை நிலையை இரண்டு வருடத்தில் 8.3 வீதமாக குறைப்பதற்கு குறித்த அமைச்சின் பங்களிப்பு அதிகம் உள்ளது.

கடந்த 2016ம், 2017ம் ஆண்டுகளில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொண்ட வாழ்வாதார உதவிகள் வழங்கும் முயற்சியின் பலனாக தற்போது 8.3 வீதமான வறுமை குறைந்துள்ளது.

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மாவட்டத்திலுள்ள பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சமமான முறையில் வாழ்வாதாரங்களை வழங்கியதன் காரணமாக மாவட்டத்தின் வறுமையை குறைக்கும் வேலைத் திட்டத்தில் அமைச்சு முதல் படி வெற்றியைக் கண்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 19.8 வீதமாக இருந்த வறுமை நிலை 8.3 வீதமாக குறைக்கப்பட்டு 11.5 வீதமாக உள்ளது. மேலும் மாவட்டத்திலுள்ள வறுமையை குறைக்கலாம் என்ற வேலைத்திட்டத்தின் ஊடாக எதிர்காலத்தில் இந்த பணியைச் செய்யக் கூடியதாக இருந்தால் இன்னும் அதிகமாக வறுமையை குறைக்கலாம் என மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் வழிகாட்டலில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் 2016ம் ஆண்டு 8678 குடும்பங்களுக்கு நூறு மில்லியன் ரூபாவும், 2017ம் ஆண்டு பத்தாயிரம் குடும்பங்களுக்கு நூற்றி இருபத்தைந்து மில்லியன் ரூபாவுமாக இரண்டு வருடங்களில் 18678 குடும்பங்களுக்கு 225 மில்லியன் ரூபா பெறுமதியில் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது.

மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினால் கடந்த 2016ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்காக நூறு மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்திருந்தார்.

இதன் மூலம் 110 செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் 23 கிராமிய பாதைகள், தடுப்புச் சுவர்கள், 12 பொதுக் கிணறுகள், 02 மலசல கூடங்கள், 102 விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரம், 167 பால் பண்ணையாளர்களுக்கு பால் கலன்கள், 268 பெண்களின் சுயதொழிலுக்கு தையல் இயந்திரங்கள், 91 மீனவர்களுக்கு ஜீபிஎஸ் கருவிகள், 1180 மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள், 950 விவசாயிகளுக்கு மண் வெட்டிகள், 03 சிறிய ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் சோளம், நிலக்கடலை, பால் பசுக்கள், நாட்டுக் கோழிக் குஞ்சுகள் போன்ற வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினால் கடந்த 2017ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்காக நூற்றி இருபத்தைந்து மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்திருந்தார்.

இதன் மூலம் 200 செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் 50 கிராமிய பாதைகள், 10 விவசாய மற்றும் பொதுக் கிணறுகள் புனரமைப்பு, 184 விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரம், 378 விவசாயிகளுக்கு தெளிகருவி இயந்திரம், 144 பெண்களின் சுயதொழிலுக்கு தையல் இயந்திரங்கள், 120 மீனவர்கள் மற்றும் விறகு விற்கும் வியாபாரிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள், 1798 விவசாயிகளுக்கு மண் வெட்டிகள் மற்றும் சோளம், நிலக்கடலை, மீன்பிடி வலைகள், மீன் பெட்டிகள், மீனவர்களுக்கு ஜீபிஎஸ் கருவிகள், நாட்டுக் கோழிக் குஞ்சுகள் போன்ற வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வேலைத் திட்டத்தினை அமுல்படுத்தும் நோக்கமானது மக்கள் பங்களிப்புடன் கிராமிய உட்கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்தல், கிராமிய மக்களின் பொருளாதார மற்றும் வாழ்வாதார அபிவிருத்திக்கு தேவையான வசதிகளையும், உபகரணங்களையும் மற்றும் அறிவினையும் வழங்குதல், கிராமிய தொழில் முயற்சியாண்மையினை மேம்படுத்தல்.

 

இவ்வாறான வேலைத் திட்டங்களை மேற்கொண்டதன் மூலம் கிராமிய பாதை புனரமைக்கப்பட்டதால் போக்குவரத்துக்கான நேரம் குறைவடைந்துள்ளது, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது, மீனவர் தங்குமிட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது, குடிநீர் வசதி மற்றும் விவசாயிகளுக்கு நீர்பாசன வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது, கிராமிய சமூகத்தினது வாழ்வாதார அபிவிருத்திகான வழிகாட்டல், விவசாய அபிவிருத்திக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது, சுயதொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான உதவிகளை கிராமிய பொருளாதார அமைச்சு மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொண்டது போன்று இனிவரும் காலங்களிலும் மேற்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை முற்றாக ஒழிக்கும் வகையில் செயற்பட வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான தொழிலாக காணப்படும் விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை போன்ற தொழில்களை நோக்கும் போது அத்தொழில்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் கால்நடை, மீன்பிடி, நெல் கொள்வனவு போன்ற திணைக்களங்கள் மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் வருவதனால் மட்டக்களப்பு மாவட்டம் மென்மேலும் அபிவிருத்திகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே இவ்வாறான வேலைத் திட்டங்களை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் எந்தவித இனபாகுபாடுகளுமின்ற வாழ்வாதார உதவிகளை வழங்கி வரும் மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

 

 

Related Post