மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவாதம் மற்றும் இனத்துவேசத்தை பேசுவது ஒரு புற்றுநோயாக காணப்படுகின்றது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டபத்தடி கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு மண்டபத்தடி விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-
இனவாதம் மற்றும் இனத்துவேசத்தை பேசி எதையும் சாதித்து விட முடியாது. தேர்தல் வந்தால் மாத்திரம் தான் மட்டக்களப்பு மாவட்டத்திலே இனவாதம் பேசப்படும். அது இந்த மாவட்டத்தில் காணப்படும் புற்றுநோயாக நான் பார்;க்கின்றேன்.
மற்றைய நாட்களின் யாரும் பேசுவது கிடையாது. அதைப்பற்றி சிந்திப்பது கிடையாது. ஆனால் அரசியல்வாதிகள் இனவாதம் பேசத் தொடங்கி விட்டார்கள் என்றால் நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும் தேர்தல் வரவுள்ளது.
கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களாக காணப்படுகின்றீர்கள். கடந்தகால யுத்தத்தால் தங்களது உறவுகள் உடமைகள் என்று எல்லாவற்றையும் இழந்த படுவான்கரை சமூகம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் சமூகம் வாழ்வாதாரம் இல்லாமல் இருக்கின்ற முகவரியாக பேசிக் கொண்டிருக்கின்ற விடயமாக காணப்படுகின்றது.
நமது பகுதியில் கட்டுமானங்கள், அபிவிருத்திகள், வாழ்வாதாரங்கள் எதுவும் இல்லை என்று சொன்னால் நாம் இருப்பதற்கு பெறுமதியில்லை. எல்லாமே இல்லை என்று சொன்னால் நாங்களும் இல்லாதவர்கள் தான். இல்லாமல் ஆக்கப்பட்டவர்கள் யார் என்று சொன்;னால் நீங்கள் சரியாக சிந்திக்கவில்லை என்ற காரணத்தினால் தான் எதுவும் இல்லை என்று கூறுகின்றீர்கள்.
நீங்கள் உங்களை ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். மண்ணின், இனத்தின், சமூகத்தின், போராட்டத்தின் பெயரால் கடந்த காலத்தில் எல்லாவற்றையும் இழந்தும் இன்னும் முறுக்கேறுகின்ற வீரவசனத்திற்கு அல்லல்பட்டுச் செல்வீர்கள் என்றால் அது எங்களுடைய பிழை அல்ல.
இந்த அரசாங்கத்தில் தமிழரோ முஸ்லிமோ ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ வர முடியாது. நமக்கு என்ன தீர்வை தருவதாக இருந்தாலும், நமக்கு பிச்சை போடுவதாக இருந்தாலும் சிங்கள தலைவர்கள் தந்தால் மாத்திரம் தான் நமக்கு கிடைக்கும்.
இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என்று முப்பது வருடங்களை கடந்து இருக்கின்றோம். தமிழ் மக்கள் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும், நியாயம் பிறக்கப்பட வேண்டும் என்று நான் நூறுவீதம் உடன்படுகின்றேன்.
இவை கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் வெறுமனே உண்ணாமல், பிள்ளைகளை கல்வி கற்பிக்கால், ஊரையும் முன்னேற்றாமல், வாழ்வாதாரத்தை தேடிக் கொள்ளாமல் இருப்போம் என்று சொன்னால் குளம் வந்தும் என்று கொக்கு குடல் வெடிச்சி செத்தது. இந்த நிலவரத்திற்குள் நீங்கள் வந்துவிடக் கூடாது என்பது எனது பிரார்த்தனை என்றார்.
பிரதியமைச்சரின் இணைப்பாளர் எஸ்.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான எஸ்.லோகநாதன், எஸ்.றிஸ்மின், வவுணதீவு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதி ஒதுக்கீட்டின் மூலம் தூர இடங்களில் இருந்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் திட்டத்தில் முதல் கட்டமாக வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் இருபது மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது ஒரு துவிச்சக்கர வண்டி 14500.00 வீதம் இறுபது துவிச்சக்கர வண்டிகளுக்கும் இரண்டு லட்சத்தி தொன்நூறு ஆயிரம் ரூபா நிதியில் வழங்கப்பட்டது.
பிரதி அமைச்சருக்கும் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் எஸ்.லோகநாதன் ஆகியோருக்கு பிரதேச மக்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.