மட்டக்களப்பு மாவட்டத்தில் மலசலகூடம் இல்லாதவர்களுக்கு மலசலகூடம் எனும் வேலைத் திட்டத்தில் 2018ம் ஆண்டில் மாவட்டத்தில் மலசலகூடம் இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள் என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை 206பி கிராம சேவகர் பிரிவில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மலசலகூடம் இல்லாதவர்களுக்கு மலசலகூடம் அமைக்கும் திட்டத்தில் அடுத்த வருடம் முதற்கட்டமாக ஐயாயிரம் மலசல கூடங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் தூர இடத்தில் இருந்து பாடசாலைக்கு நடந்து செல்லக்கூடிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி கஸ்ட பிரதேச பாடசாலைகளில் கல்வியில் முன்னேற்றத்தை கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
எதிர்காலத்தில் எமது பிள்ளைகள் நல்ல தலைவர்களாக, ஆங்கிலம் பேசக் கூடியவர்களாக, கணனி அறிவு கொண்டவர்களாக, உங்களுக்கு வழிகாட்டியாக, நல்ல அரசியல் தலைவர்களாக எமது மாவட்டத்தில் இருந்து வர வேண்டும் என நாங்கள் கனவு காண்கின்றோம்.
எமது மாவட்டத்தில் தற்போது இளைஞர்கள் போதை மாத்திரைகளை உட்கொள்கின்றவர்களாக மாறி வருகின்றனர். அவர்களை அதில் இருந்து மீட்காவிட்டால் அவர்களை நாமே அடக்கம் செய்து வைக்கின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டு விடுவோம். இருபத்தைந்து வயதிலே பிள்ளைகள் நோய் வாய்ப்பட்டு ஒன்றிற்கும் இயலாதவர்களாக மரணித்துப் போகக் கூடிய சமூகமாக எமது சமூகம் மாறிவிடும் என்ற அச்சம் என்னிடத்தில் இருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக கல்குடாப் பிரதேசத்திலே இருக்கின்ற இளைஞர்; அமைப்புக்கள், கோவில் நிருவாகிகள், பள்ளிவாயல் நிருவாகத்தினர், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், சமூக ஆர்வாளர்கள் எல்லோருமே போதைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களாக மாற வேண்டும் அப்போது தான் எம்மில் மாற்றத்தை கொண்டுவர முடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் கல்குடா பிரதேசத்தில் தான் அதிக வாக்குகள் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற நாம் ஒற்றுமைப்படவில்லை என்று சொன்னால் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ளக் கூடிய இலகுவான வாய்ப்பை இழந்து விடுவோம். எங்களுக்கு அதிகாரத்தை பலத்தை எப்போது தருகின்றீர்களோ அப்போது இந்தப் பிரதேசம் அபிவிருத்தியிலும் உரிமையிலும் வெற்றி அடைகின்றது என்றும் தெரிவித்தார்.
வாழைச்சேனை 206பி கிராம சேவகர் பிரிவில் கோழிக்கடை வீதியில் முப்பது லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இரண்டு வடிகான்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதுடன், றம்சானியா பாலர் பாடசாலைக்கு ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியில் தளபாடம் வழங்கி வைக்கப்பட்டதுடன், கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தையல் பயிற்சியை முடித்த பனிரெண்டு யுவதிகளுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வாழைச்சேனை 206பி கிராம சேவகர் பிரிவுக்கான அமைப்பாளர் எம்.எஸ்.கே.றஹ்மான் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பல நோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர் எம்.எப்.ஜவ்பர், பிரதி அமைச்சரின் இணைப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.