Breaking
Wed. Nov 20th, 2024

மட்டக்களப்பு மாவட்டத்தில் பணத்தை போதைக்காக செலவழிப்பது அதிகமாக காணப்படுகின்றது. இதனை தடுக்கும் முயற்சியில் தாய்மார்கள் செயற்பட வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் போரதீவுப்பற்று செயலகப் பிரிவிலுள்ள வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பெரியபோரதீவு கலாசார மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பகுதியில் போதைப் பாவனைக்காக செலவழிக்கும் தொகை அதிகமாக காணப்படுகின்றது. இதனை படிப்படியாக குறைக்க வைக்கின்ற செயற்பாடுகளில் தாய்மார்கள் செயற்பட வேண்டும்.

இலங்கையிலே முஸ்லிம் சமூகம் ஓரளவுக்கு நிம்மதியாக இருக்கின்றது என்றால் அவர்களின் பெரும்பான்மையானவர்கள் இடத்தில் மதுப்பாவனை குறைவாக காணப்படுகின்றது.

ஆனால் தமிழ் பகுதியில் அதிகம் காணப்படுவதால் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையில் அக்கறை காட்டுவது குறைவாக காணப்படுகின்றது. முஸ்லிம்கள் கல்விக்காக செலவழிப்பதே அதிகம் காணப்படுகின்றது.

இந்த நாட்டின் சிறுபான்மை இனத்தவர்கள் அமைச்சர்களாகத்தான் வர முடியும், ஜனாதிபதியோ அல்லது பிரதமராகவோ வர முடியாது. கிடைக்கும் பதவியை வைத்துக் கொண்டு மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்ய வேண்டும். தற்போது கிழக்கு மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி தேர்தலில் பெண்கள் தேர்தல் கேட்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஊடாக வாழ்வாதார உதவிகளை வழங்கிக் கொண்டு வருகின்றோம். மலசல கூடம் இல்லாதவர்களுக்கு மலசலம் கூடம் அமைத்துக் கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

தங்களுடைய வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் வாழ்வாதார உதவிகளை யாரும் வழங்கி இருக்க மாட்டார்கள். எக்காலத்தில் தங்களுக்கு என்ன உதவிகளை வழங்க வேண்டும் என்று நன்கு அறிந்து உதவிகளை வழங்கி வருகின்றோம் என்றார்.

Related Post