-முர்ஷிட் கல்குடா-
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமிய பொருளாதார அமைச்சினால் இருபதாயிரம் பேருக்கு இதுவரையில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
கிராமிய பொருளாதார அமைச்சின் நிதியொதுக்கீட்டின் மூலம், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரு வருடத்தில் இரண்டு தடவைகள் கிராமிய பொருளாதார அமைச்சினால் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நாங்கள் உதவிகளை வழங்கி வருகின்றோம்.
தற்போது ஒலிம்பிக்கில் முதல் இடம்பெறுவது போல் மட்டக்களப்பு மாவட்டம் போதையில் முதலிடம் பெறுகின்றது. எனவே இந்த நிலைமை மாற்றி அனைவரும் பணத்தை சேமித்து பிள்ளைகளின் கல்விக்கு உதவ முன்வர வேண்டும் என்றார்.
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் திருமதி.வி.சிவப்பிரியா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதியமைச்சரின் இணைப்பாளர்களான டி.லோகநாதன், கண்னண், எஸ்.ஜெகநாதன், திருமதி.ஜெ.மீனா, பிரதேச செலயக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது, ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிறிய தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 1.25 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அந்த வகையில் ஓடாவி உபகரணம், மேசன் உபகரணம், துவிச்சக்கர வண்டிகள், நீர் இறைக்கும் இயந்திரம், மண்வெட்டி உட்பட்ட பல உபகரணங்கள் நூற்றி என்பது (180) பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.