Breaking
Thu. Jan 2nd, 2025

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வறுமையை குறைக்க வேண்டும் என்பதற்காக இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் செயற்பட்டுவருகின்றனர் என்று கடற்றொழில் நீரியல் வளம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் ஆலோசனையில், தேசிய வடிவமைப்பு நிலையத்தினால் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தோற் பொருள் மற்றும் புடவை கைத்தொழில் சார்ந்த தொழில்களில் பயிற்சியை முடித்த தொழிலாளர்களுக்கு சான்றிதழும் இயந்திரங்களும் வழங்கும் நிகழ்வு  நேற்று முன்தினம் (30) ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது வழிகாட்டலில், புதிய பல ஊக்குவிப்பு திட்டங்கள் தொழில் முயற்சியாளர்களை மையப்படுத்தி மேற்கொள்கின்றனர் நாட்டில் உள்ள எல்லோருக்கும் அரச தொழில் கொடுக்க முடியாது என்பதால் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டங்களை எல்லாம் ஏன் அரசாங்கம் செய்கின்றது என்றால் ஒவ்வொருவரதும் வாழ்வாதாரம் சிறக்க வேண்டும்,  வருமானம் பெருக வேண்டும், பிள்ளைகள் கல்வியிலே முன்னேற வேண்டும், இந்த அரசாங்கத்தை மாற்றத்தை எதிர்பார்த்து கொண்டு வந்ததற்கு ஒவ்வொருவரது குடும்பங்களிலும் மாற்றத்தினை கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாரான வேலைத்திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்துகின்றன.

நல்லாட்சி அரசாங்கத்தினால் புதுவகையான திட்டங்கள் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் “கம்பெரலிய” என்ற திட்டத்தினூடாக ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் முதற்கட்டமாக நூறு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியின் மூலம் அந்த பிரதேசத்திலே இருக்கின்ற முக்கியமான வேலைத்திட்டங்களை செய்வதற்கு திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையிலே “கிராம சக்தி” என்ற வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, ஒவ்வொருவரது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக செயற்படுத்துகின்ற திட்டமாக அது திகழ்கின்றது. நாட்டிலே என்ன திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அது சிங்கள பிரதேசங்களிலே அதிக செல்வாக்குச் செலுத்தி, அதில் அவர்கள் வெற்றியும் காண்கின்றார்கள். நாங்கள் அவ்வாறு செயற்படுவது குறைவு. இனிமேல் அவ்வாறு இல்லாமல் “மாணியமாக கிடைக்கின்றது” என்று உதாசீனமாக நடந்துகொள்ளாமல் நாமும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்று செயற்பட வேண்டும். அவ்வாறு சிந்திக்காமல் செயற்படுவதால்தான் சிலரை வறுமை இன்னும் துரத்திக்கொண்டு இருக்கின்றது.

நாட்டில் வரி செலுத்துகின்றவர்களின் வரிப்பணத்தின் மூலம் மக்களுக்கு அபிவிருத்தி செய்கின்ற போது, அதனை மக்களும் பிரயோசனப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்லில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நாடு பூராகவும் இவ்வாறான வேலைத்திட்டங்களை செய்து வருகின்றார் என்றும் தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் ஆலோசனையில் தேசிய வடிவமைப்பு நிலையத்தினால் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட தோற் பொருள் மற்றும் புடவை கைத்தொழில் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் 53 பயனாளிகளுக்கு, பத்து நாள் பயிற்சி வழங்கப்பட்டதுடன், அவர்களுக்குச் சான்றிதழும் தொழில்களுக்கான இயந்திரங்களும் வழங்கப்பட்டன.

தேசிய வடிவமைப்பு நிலையத்தின் பணிப்பாளர் சந்திரஸ்ரீ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.ஏ.அப்கர், உதவி திட்ட பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் மற்றும் தேசிய வடிவமைப்பு நிலையத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

-முர்ஷிட் கல்குடா-

Related Post