– அபூ செய்னப் –
மட்டு,மத்தி கல்வி வலயத்தின் அடைவு மட்ட வீழ்ச்சி சிந்திக்க வேண்டிய விடயமாகும்.கடந்த காலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த வீழ்ச்சியானது இந்த பிரதேசத்தில் வாழுகின்ற அனைத்து தரப்பினரையும் சிந்தித்து செயற்பட வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். “ஈஸ்ட் கேட்” நிறுவனத்தின் அனுசரணையில் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா கல்லூரியில் இடம் பெற்ற இப்தார் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரை நிகழ்த்திய அவர்..
கடந்த காலங்களில் தேசிய ரீதியாக முதலாம் இடத்திற்கு வந்த மட்டு மத்திய கல்வி வலயமானது இம்முறை பின்தங்கிய நிலையில் இருப்பது கவலையளிக்கிறது.இதற்கான காரணகாரியங்களை கண்டறிந்து, குறைகளை நிவர்த்தி செய்து எதிர்வரும் காலங்களில் மீண்டும் கடந்த கால அடைவு மட்டத்திற்கு இந்த கல்வி வலயத்தை கொண்டு செல்ல வேண்டியது எமது தலையாய கடமையாகும். இந்த விடயத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். நான் இப்படி பேசுவது யார் மீதும் குறை சொல்வதற்காகவோ அல்லது யாரையும் பிழை கண்டுபிடிக்கவோ அல்ல, மாறாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது முயற்சியால்,தியாக சிந்தனையுடன் கூடிய அர்ப்பணிப்பணிப்புடன் இந்த கல்வி வலயத்தின் தரத்தை உயர்த்தி, இதனை நிமிர்த்தி எதிர்காலத்தில் பல சாதனைகளின் மையமாக மீண்டும் மட்டு, மத்தி கல்வி வலயத்தின் அடைவு மட்டத்தை உயர்த்தி நிரூபித்து காட்ட வேண்டும்.
இந்த விடயத்தில் பிரதேசத்தில் உள்ள கல்வியியலாளர்கள், புத்தி ஜீவிகள், கல்வி உயர் அதிகாரிகள், அதிபர்கள் ஆசிரியர்கள்,அரசியல் வாதிகள் அனைவரும் தியாக சிந்தனையுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். என்பதனை இங்கே நான் ஞாபகமூட்ட விரும்புகிறேன். இதன்போது , எங்கு பிழை நடந்துள்ளது என்பதனை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதன் மூலம் இம்முறை தேசிய ரீதியாக ஏழாவது இடத்திற்கு பின்தங்கியுள்ள மட்டு மத்தி கல்வி வலயமானது,மீண்டும் தேசியத்தில் முதன்மை நிலைக்கு கொண்டு வர முடியும் என்பதனை நான் உறுதியாக நம்புகிறேன். அதற்கான நாம் முனைப்புடன் செயற்பட வேண்டும்.
கல்வி தான் நமது சமூகத்திற்கு விடிவினை பெற்றுக்கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த சாதனமாகும். எனவே நமது அடுத்த பரம்பரைக்கு அதனை பெற்றுக்கொடுப்பதில் நாம் கரிசசனையுடன் செயல்படவேண்டும்.நவீன சவால்களை முகம் கொடுக்க வேண்டுமாயின் நம்மிடம் கல்வி எனும் ஆயுதம் நம்மிடம் இருக்க வேண்டும்.
நமது பிரதேசத்தில் இம்முறை அதிபர் பரீட்சையில் சித்தியடைந்துள்ள 14 அதிபர்களுக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் இந்தப்பிரதேசத்தின் சொத்துக்கள். பின்தங்கிய இந்தப்பிரதேசத்தில் கற்று உயர்ந்தவர்கள். எனவே இந்தப்பகுதியின் கல்வி வளர்ச்சிக்கு இதயசுத்தியுடன் அவர்கள் செயலாற்ற வேண்டும் என்று அவர்களை வினயமாக கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இந்த அதிபர்களை “அமீர் அலி” பவுண்டேசனுக்கூடாக கெளரவிக்கும் ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தெரிவு செய்யப்பட்டுள்ள அதிபர்கள் இந்தப்பிரதேசத்தின் கல்வி மேம்பாட்டில் உறுதியுடன் செயல்படுவார்கள் என நான் நம்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.