Breaking
Fri. Jan 10th, 2025

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு 1222 திட்டங்களுக்காக 7451 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும் சமுர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சருமான எம்.எஸ்.எம்.அமீரலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களான சமுர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சருமான எம்.எஸ்.எம்.அமீரலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாசீர் நசீர் அகமட் தலைமையில் நேற்று (07)  வியாழக்கிழமை காலை 9 மணிமுதல் 4 மணிவரை நடைபெற்றது.

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களை ஆராயும் வகையில் இந்த அபிவிருத்திக் குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்த திட்டத்தின் கீழ் விசேட நிதியின் கீழ் 3524 மில்லியன் ரூபாவும் கிழக்கு மாகாணசபையினால் 657 மில்லியன் ரூபாவும் அமைச்சுகளினால் 1895 மில்லியன் ரூபாவும் அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக 688மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் பூர்த்தியடையாத வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. முக்கியமாக நேற்றைய அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மதுபானசாலைகளை குறைப்பதற்கான வேண்டுகோளை அரசாங்கத்திடம் விடுப்பது எனவும் அவ்வாறு நடைபெறாத பட்சத்தில் அனைத்து அரசியல் பிரதிநிதிகளும் இணைந்து மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தினை மேற்கொள்வது எனவும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 67 மதுபானசாலைகள் செயற்படுவதாகவும் சில பகுதிகளில் அதிகளவாக மதுபானசாலைகள் உள்ளதாகவும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிக மதுபானசாலைகள் உள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

எனினும் மதுபானசாலைகளுக்கான அனுமதியை இரத்துச்செய்யும் உரிமை மாவட்ட செயலகத்துக்கு இல்லையெனவும் அதற்கான பலம் மதுவரித்திணைக்கள ஆணையாளருக்கே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தவேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்க முடியாது எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

எனினும் புதிதாக மதுபானசாலைகள் அமைப்பதற்கு அனுமதிகள் வழங்க முடியாத வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால் எதுவித மதுபானசாலைகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லையெனவும் பழைய மதுபானசாலைகளே இயங்கிவருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எம்.அமீரலி, மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமை நிலைக்கும் இங்குள்ள மதுபானசாலைகளும் முக்கிய காரணமாகும். எனவே இவற்றினை இங்கு குறைப்பது தொடர்பில் நாங்கள் அனைவரும் ஒருமித்த செயற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும்.

மதுபானசாலைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அரைவாசியாக குறைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவேண்டும். அதற்காக இந்த கூட்டத்தில் ஏகமனதான தீர்மானிக்கப்படுகின்றது மட்டக்களப்பில் உள்ள மதுபானசாலைகளை அரைவாசியாக குறைக்கவேண்டும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் அனைவரும் இணைந்து மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தினை வாகரையில் இருந்து களுவாஞ்சிகுடி வரையில் நடாத்துவோம். இதற்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்றார்.

Related Post