Breaking
Mon. Dec 23rd, 2024

மண் சரிவுக்குள்ளான பகுதிகளை அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்துமாறும், குடியிருப்புக்கு பொருத்தமற்றது என அரசாங்கம் ஏற்கனவே குறிப்பிட்ட இடங்களில் குடியிருக்க எவருக்கும் எவ்வித அனுமதியும் வழங்கப்படக் கூடாதெனவும் ஜனாதிபதி கண்டிப்பான உத்தரவு வழங்கியுள்ளார்.

எதிர்பாராமல் முகங்கொடுத்த அவசர அனர்த்த நிலைமையை முகாமைப்படுத்தி மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அமைக்கப்பட்ட அவசர அனர்த்த செயலணி ஜனாதிபதி தலைமையில் நேற்று(23) மாலை ஜனாதிபதி செயலகத்தில் கூடியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் விடயங்கள் தொடர்பான அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர், உள்ளிட்ட அமைச்சரவை செயலாளர்கள், முப்படைத் தலைவர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கூறிய ஜனாதிபதி, நிதி தொடர்பாக எவ்வித சிக்கல்களுமின்றி அவர்களின் நலனைப் பேண நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் உடனடி நிவாரணமாக ரூபா 10,000 வழங்க தீர்மானிக்கப்பட்டது. வெள்ள நீர் வடிந்த பின்னர் மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. அவர்களின் சுகாதார தேவைகள் பற்றியும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் மீண்டும் இவ்வாறான நிலைமைக்கு ஆளாகாமல் பாதுகாப்பது எப்படி என்பது பற்றியும் ஆராயப்பட்டது.

இன்றிலிருந்து மேல் மாகாணத்தில் தாழ்நிலங்களை நிரப்பி கட்டுமானங்களை அமைக்க அனுமதிக்க வேண்டாமென ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றும் இடங்களை சரியான முறையில் பெற்றுக்கொள்ளும் படியும் பாடசாலை மாணவர்களின் கல்விக்காக விசேட நடவடிக்கைகளை எடுக்குமாறும் கூறினார். வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் மீள குடியேற முடியுமாவென ஆராயும்படி கட்டட ஆராய்ச்சி திணைக்கள ஊழியர்களுக்கு உத்தரவிட்ட ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைவில் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபடுமாறும் கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை துப்பரவு செய்யத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்வந்துள்ளது. ஏற்பட்டுள்ள அழிவுகள் பற்றியும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசு எடுத்துள்ள நிவாரண நடவடிக்கைகள் பற்றியும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா விளக்கமொன்றை அளித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க ஜப்பான், இந்தியா, துருக்கி, மாலைதீவு, பாகிஸ்தான் உள்ளிட்ட 05 நாடுகள் முன்வந்துள்ளன. இன்னும் பல நாடுகளும் உதவி அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.

உடுதுணிகள், சமையலறை உபகரணங்கள், மின்சார உபகரணங்கள் மற்றும் சுகாதார உதவிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவைப்படுகின்றது. அனர்த்தம் ஏற்பட்ட சந்தர்ப்பத்திலிருந்து அம் மக்களுக்கு உதவி செய்த அனைத்து மக்களுக்கும், கட்சி, எதிர்க்கட்சி அமைச்சர்களுக்கும், ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட அனைத்து சர்வதேச அமைப்புகள் மற்றும் நாடுகளுக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் தனது நன்றியை ஜனாதிபதி தெரிவித்தார்.

By

Related Post