கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலைக்காடு குளத்தில் மண் அகழப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையில் திங்கட்கிழமை (25.09.2017) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பாலைக்காடு குளத்தில் மண் அகழப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் மண் அகழ்வதற்கு வழங்கப்பட்ட இடத்தில் மண் அகழாமல் அதனை அண்டிய பகுதியில் மண் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. இதனால் அப்பிரதேசம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் முன்வைத்த கோரிக்கையையடுத்து மண் அகழப்படுவதை தடுத்து நிறுத்துமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் வெற்றிலைக் கடைகள் அதிகம் காணப்படுகின்றதுடன், இதனூடாக போதைப் பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக முன்வைத்த கருத்துக்கமைய வெற்றிலைக் கடை வியாபாரிகளுக்கு மாற்றுத் தொழிலை அறிமுகப்படுத்தி கடைகளை மூடுவதன் மூலம் மாணவர்களை போதைப் பாவனையில் இருந்து பாதுகாப்பதற்கு வெற்றிலை வியாபாரிகள் உதவ வேண்டும் என்று இணைத் தலைமைகள் கேட்டுக் கொண்டனர்.
கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைய ஓட்டமாவடி கல்வி கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர்கள் கல்வி நடவடிக்கை நேரங்களில் ஸ்மார்ட் தொலைபேசி பாவனையை அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில்; பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத், உதவி பிரதே செயலாளர் எம்.அல் அமீன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்ஏ.றியாஸ், பிரதேச திணைக்கள தலைவர்களும், பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.