Breaking
Tue. Dec 24th, 2024

– க.கிஷாந்தன் – 

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி பௌவாகம பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மாணவனொருவன் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி கதிரேசன் கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 4இல் கல்வி பயிலும் 09 வயதுடைய திருச்சந்திரன் கோஷிகன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

குறித்த மாணவன் பாடசாலை விட்டு வீடு திரும்பிய போது, வீட்டுக்கு அருகில் உள்ள மண்மேடு சரிந்து விழுந்ததில் மண்மேடுக்குள் புதையுண்டு உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்த நாவலப்பிட்டி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீரற்ற காலநிலை நிலவுவதனால் மண்சரிவு அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

Related Post