தேர்தல் வன்முறை, வாக்கு மோசடி, தேர்தல் பணியாளர்களுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஆயுதத்தைக் காட்டி அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள மத்திய மாகாண சபை தவிசாளர் மஹிந்த அபயக்கோனுக்கு கண்டி மேல் நீதிமன்றம் இரண்டரை வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இவர் மீது சுமத்தப்பட்டிருந்த மூன்று குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டிருந்ததன் பேரில் ஆறு மாத கால சிறைத் தண்டனையும் ஏனைய இரு குற்றச்சாட்டுக்களுக்கும் தலா ஒருவருடம் என்ற ரீதியில் இரண்டரை வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரசார காலத்தின் போது தேர்தல் வாக்களிப்பு நிலைய பணியாளர்களை அச்சுறுத்தியமை, வாக்களர்களுக்கு இடையுறு விளைவித்தமை, சட்டவிரேதமாக ஆயுதம் வைத்திருந்தமை மற்றும் சட்டவிரோத ஒன்று கூடல்களை மேற்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டு கண்டி மேல் நீதி மன்றில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
கலஹா பொலிஸாரால் தொடரப்பட்ட மேற்படி வழக்கில் மஹிந்த அபயக்கோன் உட்பட 12பேர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர். இவர்களில் 11பேர் வழக்குகளிலிருந்து விடுதலைசெய்யப்பட்ட நிலையில் மஹிந்த அபயக்கோன் மீது தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை இவ்வழக்கின் விசாரணைகள் கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது அபயக்கோன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டது.இதேவேளை அபயக்கோன் மீது மேலும் பல விசாரணைகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-VK-