மன்னார் மாவட்ட அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டிருக்கும் பல கோடி ரூபா நிதிஒதுக்கீடுகளால் மக்கள் உரிய பலனைப் பெறுவதற்கு மத்திய அரசும் மாகாண அரசும் அபிவிருத்தி முயற்சிகளுக்காக இணைந்து செயற்பட முன்வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ‘நிலமெகவர’ வேலைத்திட்ட ஜனாதிபதி நடமாடும் சேவை மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நானாட்டான் பிரதேச செயலாளர் மானிக்கவாசகர் ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் , காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம் வை தேஷபிரிய, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி எம் கொடகந்த, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் டிமெல், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் மேலும் கூறியதாவது,
மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக மத்திய அரசாங்கம் பல கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. மாவட்டத்தின் பிரதேச மற்றும் நகர சபைகளுக்கு உட்பட்ட பாதைகளை செப்பனிடுவதற்கு 650 மில்லியன் ரூபாய்களை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அத்துடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழான மன்னார் வவுனியா பாதையை புனரமைக்கும் ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் தற்போது இடம் பெற்று வருகின்றன. அதே போன்று மன்னாரில் இருந்து வவுனியா வழியாக திருமலை மற்றும் தம்புள்ளைக்கான அதிவேக நெடுஞ்சாலை பாதை அமைக்கும் திட்டம் ஒன்றையும் அரசு கொண்டுள்ளது. கடந்த வருடம் இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 3000 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அடுத்த வருடமும் 3000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் எழுத்து மூல கோரிக்கையை ஏற்று நான் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த மன்னார் நகர அபிவிருத்தி தொடர்பான இரண்டு அமைச்சரவைப் பத்திரங்கள் தற்போது அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மன்னார் பஸ் தரிப்பிடத்தையும் சந்தைத் தொகுதிக்கான கட்டிடத்தையும் அமைப்பதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கான பத்திரமே அது. இதன் மூலமும் ஏனைய நிதி ஒதுக்கீடுகள் மூலமும் மன்னார் நகரை நவீன மயப்படுத்த நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அரசாங்கத்தின் ஒதுக்கீடுகள் கிராமப்புற மக்களுக்கு சரியாக சென்றடைந்து அவர்கள் யன்பெற வேண்டும் என்பதே எமது இலக்காகும். அபிவிருத்தி என்று வரும் போது அங்கே அரசியல் நலன்கள் மையமாக இருக்கக் கூடாது. தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் தமது அரசியல் செயற்பாடுகளையும் கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு செல்லலாம். அதைவிடுத்து அபிவிருத்தியில் அரசியல் சாயத்தை நாம் பூச விழைந்தால் பாதிக்கப்படுவது பாமர மக்களே. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சின் ஊடகப்பிரிவு.