மத்திய மாகாண தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் 2017 ஆம் ஆண்டு உயர்கல்வியை தொடர்வதற்காக விண்ணப்பித்த வெளி மாகாண மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், இரத்தினபுரி மாவட்ட மாணவர்கள் பெரிதும் பாதிப்புகளுக்குள்ளாகி இருப்பதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி மாவட்டத்தின் தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் உயர்தரப் பிரிவுகளில் கலை, வர்த்தகப் பிரிவுகள் மாத்திரமே போதிக்கப்பட்டு வருகின்றன. விஞ்ஞான, கணித பிரிவுகளில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்கள் மத்திய மாகாணத்திற்குச் செல்கின்றனர். தற்போது, இம் மாணவர்களுக்கு அங்கும் கதவடைப்பு செய்யப்பட்டிருப்பதால், உயர்கல்வியைத் தொடர வழியின்றி மாணவர்கள் அல்லல்படுகின்றனர்.
எமது பிள்ளைகள் க.பொ.த. (சா/த)தரப் பரீட்சையில் சித்திபெறும் வகையில் பல்வேறு கஷ்டங்களுக்கு முகங்கொடுக்கின்றோம். அவர்களை எப்படியாவது உயர்நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பெருமளவில் பணத்தையும் செலவழித்து உயர்தர கல்வி வாய்ப்புள்ள மத்திய மாகாண பாடசாலைகளில் சேர்க்கின்றோம்.
இம்முறை வெளி மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால் எமது இரத்தினபுரி மாவட்ட தமிழ்பேசும் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை உண்டு பண்ணியுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் சகல பிரிவுகளையும் கொண்ட உயர்தர வகுப்புக்களைக் கொண்ட தமிழ்மொழி மூலப் பாடசாலை இல்லை. அதனாலேயே எமது பிள்ளைகளை வெளி மாவட்டங்களில் இணைக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.
இலங்கை ஒரு சுதந்திர நாடு என்ற வகையில், எமது பிள்ளைகள் நாட்டின் எப்பாகத்திலும் கல்வியைக் கற்றுக்கொள்ளவும், பரீட்சைகளுக்கு முகங்கொடுக்கவும் உரிமையுண்டு. அதனை இல்லாமற் செய்வது பொருத்தமற்றதொரு விடயம் என்றும் பெற்றோர் சுட்டிக் காட்டுகின்றனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளுடனும் கூடிய உயர்தரப் பிரிவுகளைக் கொண்டதொரு பாடசாலையை உடனடி யாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்ப டல் வேண்டும். அது உடனடியாக சாத்தியப்படாத பட்சத்தில் தற்பொழுது இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு தமிழ்மொழி மூல தேசியப் பாடசாலையான பலாங்கொடை ஜெய்லானி மத்திய கல்லூரியில் கலை, வர்த்தக, நவீன விஞ்ஞான தொழில்நுட்பம் போன்ற பிரிவுகள் உள்ளதுடன் விஞ்ஞான, கணித பிரிவுகளுக்கான வசதிவாய்ப்புகள் காணப்பட்டு வருகின்ற அதேநிலையில் ஆசிரியர் பற்றாக் குறை காணப்பட்டு வருவதாக தெரிவிக் கப்படுகின்றது.
எனவே, இரத்தினபுரி மாவட்ட மாண வர்களின் உயர் கல்விக்கு உதவும் முகமாக உடனடியாக சகல பிரிவுகளையும் கொண்ட தாக ஒரு பாடசாலையைக் கட்டியெழுப்பு மாறு பிரதேச பெற்றோர் வேண்டுகின்ற னர்.