Breaking
Sat. Dec 28th, 2024
நாட்டில் மத சுதந்திரத்தை ஏற்படுத்தி புதிய கலாசார யுகமொன்றை உருவாக்கவே மஹிந்த ராஜபக்ஷ மீதான நட்பினை மறந்து கொள்கையை அடிப்படையாகக் கொண்டே அரசிலிருந்து வெளியேறினோம். எமக்கு நட்பை விடவும் கொள்கையே முக்கியத்துவம் வாய்ந்தது என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
யுத்தம் நிறைவடைந்து பின்பு நாட்டில் மத நல்லிணக்கத்தை இந்த அரசு ஏற்படுத்தவில்லை. ஆகவே, ஜனவரி 9 ஆம் திகதி இலட்சக்கான விருப்பு வாக்கு வித்தியாசத்தில் பொது வேட்பாளர் வெற்றி பெறுவார். குறித்த பெறுபேறானது மத சுதந்திரத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்த பின்பு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தினோம். அரசிற்கு பல முறை அறிவுரை கூறினோம். இருப்பினும் எமது பேச்சை தட்டி கழித்து மதங்களுக்கிடையிலும் இனங்களுக்கிடையிலும் பொறாமையையும் வைராக்கியத்தையும் அரசாங்கம் ஏற்படுத்தியது.
எனினும் அரசாங்கம் யுத்தத்திற்கு பின்பு நாட்டில் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த தவறி விட்டது. இருப்பினும் அதற்கு பதிலாக இனவாதத்தை போஷித்தது. மேலும், அடிப்படைவாதிகளுடன் இணைந்து செயற்படுகிறது.
நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மீதான நட்புறவை உதறி தள்ளிவிட்டு மைத்திரிபால சிறிசேன என்ற நல்ல குணநலமிக்க சிறந்த கொள்கையுடையவருடன் இணைந்தோம். நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி புதிய கலாசாரத்தை உருவாக்கவே அரசிலிருந்து வெளியேறியது. எனவே, எமக்கு நட்பை விடவும் கொள்கையே முக்கியமாகும்.
புதிய கலாசாரத்தினூடாக பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதமில்லை. அதுவே மைத்திரி யுகத்தின் உதயமாகும்.
எனவே, இன, மத சுதந்திரத்தை ஏற்படுத்தும் முக்கிய வேலை திட்டத்தை நாம் நாட்டில் ஏற்படுத்த வேண்டும். ஆகவே, ஜனாதிபதி தேர்தலில் இலட்சக் கணக்கான விருப்பு வாக்குகள் வித்தியாசத்தில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார்.
இதற்கமைய ஜனவரி 9 ஆம் திகதி வெளிவரும் தேர்தல் பெறுபேறானது நாட்டில் மத இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த கூடியதாக இருக்கும் என்றார்.

Related Post