அரசியல் பெறுமானங்களில் முழுமை பெற்ற ஒரு அரசியல்வாதியாக மக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து செயற்பட்ட திரு. சோமவீர சந்திரசிறி போன்ற ஆளுமைகள் தற்கால அரசியல்துறைக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, திரு. சோமவீர அரசியல் அதிகாரத்தை தமது அதிகாரத்துக்காகவன்றி மக்களின் சேவைக்காக உரிய முறையில் பயன்படுத்திய அரசியல்வாதியாவார் எனக் குறிப்பிட்டார்.
தற்கால அரசியல் பண்புகள் இகழப்படும் நிலைக்கு காரணமாகியிருப்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் அவ்வதிகாரத்தை நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அன்றி தமது அதிகாரங்களை அதிகரித்துக்கொள்வதற்காகவும் எதிர்காலத்தில் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் பயன்படுத்திவருவதே அந்த நிலைமைக்கு காரணம் என்றும் குறிப்பிட்டார்.
திரு. சோமவீர சந்திரசிறி 45 வருடங்களின் பின்னரும் ஒரு முன்மாதிரி அரசியல்வாதியாக மீண்டும் மீண்டும் நினைவுகூறப்படுவதற்கு காரணம் அத்தகைய அதிகார துஷ்பிரயோகமற்ற அரசியல்வாதியாக இருந்ததன் காரணத்தினாலாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சோமவீர சந்திரசிறி கலாசார மன்றத்தினால் இந்த நினைவுதின நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்ததுடன், மன்றத்தினால் பகிர்ந்தளிக்கப்படும் மூக்குக் கண்ணாடிகளும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் பேராசிரியர் பிரநீத் அபேசுந்தர உள்ளிட்ட கல்விமான்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.