Breaking
Thu. Dec 26th, 2024

மனச்சாட்சிகளின் கண்களைத் திறந்த பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகள், முடிந்த பின்னும் சிலரின் மனநிலைகள், பழைய பிடிவாதத்திலிருந்து தளர மறுக்கின்றன. இல்லாத குற்றங்களுக்காக எவரையும் தண்டிக்க முடியாது.

நாட்டின் எதிர்காலம் சிங்களவர்களுக்கு மட்டுமே என்ற நிலைப் பாட்டில் உள்ளோரே ,அப்பாவிகளைக் காப்பாற்றும் இந்த தர்மத்தைத் தகர்த்தெறியப் புறப்பட்டுள்ளனர், உளவுத்துறை, பாதுகாப்புத் துறை,சட்டத்துறை உள்ளிட்ட நாட்டின் சகல துறைகளிலும் இவர்களின் சந்தேகப் பார்வைகள் நுழைந்துள்ளதால், அரச இயந்திரத்தை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் சிக்கலைத் தோற்றுவித்துள்ளது. எத்தனை தடவைகள் எடுத்துச் சொன்னாலும் எந்த நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கினாலும் இந்தப்பெரும்பான்மைவாதிகள் அடங்குவதாயில்லை. சிறுபான்மைத் தலைவர்களைத் தீர்த்துக்கட்ட வேண்டுமென்ற இவர்களின் ஆவேசம்,தர்மச்சக்கரத்துக்கும்,கப்பல் வளையத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் கண்களைக் குருடாக்கிவிட்டன. மகப்பேற்று வைத்தியத்தில் இவர்கள் சொல்லும் விளக்கவுரை, ஆண்டவனால் மட்டுமே முடிந்த உயிரின் விதியை வைத்தியர்களின் கைகளுக்கு கை மாற்றியுள்ளது.

சிங்கள சமூகத்தின் இனவிருத்தியைத் திட்டமிட்டு குறைப்பதில் முஸ்லிம்கள் ஏன் அக்கறைப்பட வேண்டும்? முஸ்லிம் சமூகத்தின் பரம்பல் பௌத்த தேசியத்துக்கு சவாலாவது எப்படி? எண்பது வீதச் சிங்களவர்களுக்கு சமமாக வளர்வதானால் எட்டு வீத முஸ்லிம்கள் ஓர் ஆண்டுக்கு எத்தனை குழந்தைகளைப் பெற வேண்டும். வாழ்க்கைச் செலவு விண்ணைத் தொட்டும்,பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்கான போட்டி, சுகாதாரம், வாழ்விடங்களுக்கு ஏற்பட்டுள்ள கிராக்கிகள் பெற்றோரின் பாதி நேரத்தையே விரக்திக்குமுள்ளாக்கியுள்ள இக்காலத்தில்,போட்டிக்கு யார் குழந்தை பெறப்போகின்றனர். ஆசைக்கு ஒன்று, அஸ்திக்கு ஒன்று, இரண்டுக்கு அதிகமாகக் குழந்தைகள் இருந்தால் குடும்ப கௌர
வத்துக்கு இழுக்கென எண்ணி,செல்லப் பிராணிகளை வளர்க்கும் சமூகத்தில் எவ்வாறு இனப்பரம்பலை எதிர்பார்ப்பது? ஆடம்பர வாகனங்களில் செல்லப்பிராணிகளை ஏற்றியவாறு அவற்றுக்குச் செலவிடும் தொகைகளை இந்தப் பெரும்பான்மைவாதிகள் கட்டுப்படுத்த குரல் கொடுப்பதில்லை .ஏன்? ஒரு பால்மா பக்கற்றை வாங்குவதற்கு சிங்கள சமூகத்தில் தாய்மார்கள் படும் பொருளாதார அவஸ்தைகள் இவர்களின் கண்களில் தென்படாதுள்ளதே! ஏன்? செல்லப் பிராணிகளுக்கு சிங்களச் செல்வந்தர்கள் செலவிடும் தொகையில் மூன்று குழந்தையை வளர்க்க முடியுமே! காருண்யம் முதலில் மிருகங்களுக்கா? மனிதர்களுக்கா?சிறுபான்மைச் சமூகத்துக்கு எதிரான பெரும்பான்மைவாதிகள் அவசரமாக இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தினர் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வழக்காறு ஒரு காலத்தில் இருந்தாலும் இப்போது இல்லை.நாகரீக மாற்றம்,பொருளாதாரப் போட்டி,வாழ்வியல் சவால்களால் திருமண வயதெல்லை பெரும்பாலும் 25 ஐயும் தாண்டிச் செல்கிறது.சட்டம், சமயங்கள், வழக்காறுகளை விடவும் மேற்சொன்ன விடயங்களே குடும்பக் கட்டமைப்பு, திருமணத்தை தீர்மானிக்கின்றன .எனவே எதற்கெடுத்தாலும் இஸ்லாமிய சட்டங்கள்,நெறிமுறைகள், தர்மங்களை விமர்சிப்பதை பெரும்பான்மைவாதிகள் தவிர்ந்து கொள்ள வேண்டும். இவ்விடயத்தி லிருந்து இவர்கள் விடுபடும் வரை எமது நாட்டை ஆள்வதற்கான சந்தர்ப்பத்தை இவர்களுக்குப் பின்னாலுள்ளோருக்கு வழங்க முடியாது.சாதாரண விடயங்களுக்கும் மதச்சாயங்கள் பூசி, அதிகாரத்தை மீண்டும் கையிலெடுப்பதே பெரும்பான்மைவாதிகளின் புதிய வியூகமாகும்.
சைவக்கடைக்குச் செல்பவன் இறைச்சிக்கறி கேட்க முடியாது. முஸ்லிம் கடைக்குச் சென்று சைவச் சோறு சாப்பிட முடியாது. மன உணர்வோடு ஒன்றித்த எல்லோருக்கும் தெரிந்த இந்தச் சாதாரண விடயங்களை சட்டம் போட்டுக் கட்டுப்படுத்தினால், கட்டுப்பாடு, கடப்பாடுகளிலிருந்து மக்கள் விலகிடுவர்.இந்த நிலைப்பாடுகளிலிருந்து மக்கள் தூரமாவது மத அமைப்புக்களையும் தனிமைப்படுத்தி விடும்.ஈஸ்டர் தினத் தாக்குதலுக்குப் பின்னர் எழுந்துள்ள இந்தப்புத்தம் புது வேதாந்தங்கள் மதங்களின் அடித்தளங்களையே ஆட்டங்காண வைத்துள்ளன.

அமைச்சர் ரிஷாத்பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத்சாலி ஆகியோருக்கு எதிரான, இவர்களின் வக்கிர சித்தாந்தங்களால் உலகமே வாய்பிளந்து நின்றதை எமது மனச்சாட்சிகள் மறக்காது. வில்பத்து விவகாரத்தில் ரிஷாத்பதியுதீனை வளைத்துப் பிடித்து வீழ்த்த எத்தனித்த இந்த வக்கிரர்கள்,ஈஸ்டர் தினத் தாக்குதலையும் தோளில் சுமந்து அமர்க்களம் பண்ணினர்.ஆனால் தர்மத்தையும் நீதியையும் இவர்களால் அசைக்க முடியாமல் போயிற்று. முஸ்லிம் கலாசார அமைச்சில் பணியாற்றிய மொயினுதீன்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனின் அகதி வாழ்க்கையின் ஆரம்ப வாழ்வோடு தொடர்புபட்டவர்.மகனை அழைத்துச் சென்றது யார் என்ற,தகவலைப் பெற்றுத் தருமாறு கோரும் ஒரு தந்தையின் கோரிக்கை, அதுவும் தனது தோளுக்கு நிகரான தோழரின் தவிப்பைத் தட்டிவிடுவதா?அல்லது தடவி விடுவதா?

சாதாரண ஒருவரால் இராணுவத் தளபதியைத் தொடர்பு கொள்ளும் நடைமுறை, பாமரன் ஒருவன் பிரதமரைத் தொடர்பு கொள்ளும் பரபஸ்பர உறவாடல் எமது நாட்டில் இல்லையே! இருந்தால் ஏன் இத்தனை அலைக்கழிதல்கள். தொலைபேசியைச் சுழற்றி இராணுவத் தளபதியைத் தொடர்பு கொண்ட ரிஷாத், “இன்னார் இருக்கிறாரா?” “இப்போது சொல்ல முடியாது. பின்னர் தொடர்பு கொள்ளுங்கள்”. இராணுவத் தளபதியின் பதிலில் நம்பிக்கை மேலிட இரண்டாவது முறையும் அழைப்பு. “விசாரித்துச் சொல்கிறேன்” என்ற பதிலில் மூன்றாவது முறையும் தொடர்பு கொள்ள நேரிட்டது. சாதாரண இந்தத் தொடர்பாடலை அழுத்தம் கொடுத்ததாகச் சித்தரித்து ஒரு சமூகத்தின் தலைமையை முழுப்பயங்கரவாதியாக்கப் படம்பிடிக்க முயன்றதில் வேறு ஏதோ, அரசியல் கதை, திரையிடப்படாமலுள்ளது. ஆனால் இப்படத்தை திரையிட முன்னரே, இதன் இயக்குநர் களை முஸ்லிம்கள் அடையாளம் கண்டனர்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தௌிவான பதில்களால் பார்த்தோரையும், கேட்டோரையும் பரவசப்படுத்திய ரிஷாத்பதியுதீன் இதற்கு முன்னர் எத்தனை இமயங்களையும் உயரங்களையும் ஏறி வந்திருப்பார் என்பதில் தௌிவு கண்டனர். “பயங்கரவாதத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை” நாட்டின் அதியுச்ச உளவுத்துறை,இரகசியப் பொலிஸார், குற்றப்புலனாய்வுத்துறை அறிவித்தும் இந்த வீணர்களின் வைராக்கியம் வீழவில்லையே !ஏன்? சஹ்ரான் தலைமையிலான கும்பலை அடியோடு கண்டு பிடித்து அவர்களின் வாடைகளை வேரோடு பிடுங்கியெறிந்த, பாதுகாப்புத் துறை, முன்னாள் அமைச்சர், முன்னாள் ஆளுநர்கள் பயங்கரவாதத்துடன் தொடர்புற்றிருக்க முடியாதென ஆணித்தரமாகச் சொல்கிறது.

ஆனால் இனவாதமென்ற தீப்பொறியால் தங்களது கண்களையே சுட்டுக்கொண்ட இந்தக் குருடர்கள் தொடர்புள்ளதாகத் திரும்பவும் கொக்கரிக்கின்றனர்.

குருநாகல் வைத்தியர் தொடர்பில் 250 பக்க பீ (B) அறிக்கைகளையும் இவர்கள் நம்பவில்லை. அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க,இவர்கள் கையாளும் முறைகள் ஒரு சமூகத்தின் அடிப்படை உரிமைகளையே மறுதலிப்பது, பெரும்பான்மைவாதிகளின் அடிப்படைவாதத்தையே மறுபுலத்தில் புலப்படுத்துகிறது.

சுஐப் எம் காசிம்-

Attachments area

Related Post