மனச்சாட்சியுள்ள எந்தவொரு சிறுபான்மை மகனும் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கமாட்டான் எனவும் வாக்களிக்கக் கூடாதெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
வவுனியாவில், இன்று (03) தமிழ் மற்றும் முஸ்லிம் கிராமங்களான எருக்கலங்கல், அண்ணாநகர், முகத்தான்குளம், மறக்காரம்பளை, வாழவைத்தகுளம், மதீனா நகர், சூடுவெந்தபுலவு, பாவற்குளம் ஆகிய கிராமங்களில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற சூறாவளி பிரசாரத்தின் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
“கடந்த பல தசாப்தங்களாக இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்து வருகின்றனர். காணாமல் போனோரை தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் தாய்மார்களும் உறவினர்களும் அலைகின்றனர். வீதிகளிலே நீண்டகாலமாக உண்ணாவிரதம் இருக்கின்றனர். இடப்பெயர்வின் காரணமாக நாம் பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாதவை. வீடுகளை இழந்தோம், வாசல்களை இழந்தோம், சொத்திழந்தோம், சுகமிழந்து வாழ்கின்றோம். எனினும், இன்னும் நமக்கு நிம்மதி கிடைக்கவில்லை.
2015 இல் சிறுபான்மை மக்களின் கூடிய ஆதரவில் உருவாக்கப்பட்ட அரசிலும் நாம் எதிர்பார்த்த நிம்மதி கிடைக்கவில்லை. ஜனாதிபதி ஒரு கட்சியில் பிரதமர் இன்னொரு கட்சியில் இருந்ததினாலும் தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட அரசியல் இழுபறி காரணமாகவும் இந்த துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
எனினும், இனிவரும் காலங்களில் அவ்வாறான ஓர் ஆட்சி இருக்கக் கூடாது என்பதற்காகவே ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட அமைச்சரான சஜித் பிரேமதாச, ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார். சிறுபான்மைக் கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோரின் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றின் முழு ஒத்துழைப்புடனும் விருப்பத்துடனும் சஜித் பிரேமதாச, இந்தத் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்த நாட்டிலே இனி சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதங்களோ பாகுபாடோ இருக்கக் கூடாது எனவும் அவ்வாறான ஒரு வேறுபாடு உருவாகுவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் சஜித் பகிரங்கமாகத் தெரிவித்து வருகிறார். சகல இனங்களுக்கும் சமனான வாய்ப்பும் சலுகைகளும் வழங்கப்படுமெனவும் சட்டத்தை தனியார் எவரும் கையிலெடுக்க அனுமதிக்கமாட்டேன் எனவும் அவர் அடித்துக் கூறி வருகின்றார். தான் ஒரு சுத்தமான பௌத்தன் எனவும் உண்மையான பௌத்தன், பிறமதங்களின் பள்ளிவாயல்கள், ஆலயங்களை உடைக்கவோ, உடைப்பதற்கு துணைபோகவும் மாட்டான் எனக் கூறிவரும் சஜித் பிரேமதாச, அதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் உறுதியளித்துள்ளார். சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களான நாம், அவரை திடமாக நம்புகின்றோம். உங்களின் பிரதிநிதிகளான நாங்களும் அந்தச் செய்தியை தெரிவிப்பதோடு மாத்திரமின்றி, அவர் மீது நீங்களும் நம்பிக்கை கொள்ளலாம் என உறுதிபடத் தெரிவிக்கின்றோம்.
நாம் கடந்த காலங்களில் பட்ட துன்பங்கள் போதும். இனியும் அவலங்களை அனுபவிக்கக் கூடாது. அச்சமின்றி, நிம்மதியாக வாழ வேண்டும். எதிர்கால சமுதாயத்துக்கு நல்ல பாதையை காட்ட வேண்டும். அந்த வகையில், இனிவரும் காலங்களில் இந்த நாட்டிலே இன ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு, சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க வேண்டியது நமது கடமையாகும். அனைத்து சமூகத்தினரையும் அவர் அரவணைத்துச் செல்வார் என்பதை இந்த சந்தர்ப்பத்தில், மீண்டும் உறுதியுடன் தெரிவிக்கின்றேன்” இவ்வாறு அமைச்சர் கூறினார்