இறுதி யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா என தமிழர் தரப்பினருக்கும் சர்வதேச தரப்புக்கும் ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை தீர்க்கவேண்டியது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும். குற்றங்கள் இடம்பெற்றிருப்பின் நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். எனினும் உள்ளக விசாரணை பொறிமுறைகளை பலப்படுத்தி அதனூடாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை மீதான அறிக்கை கடுமையானதாக அமையும் என செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இலங்கையின் செயற்பாடுகள் எவ்வாறானதாக அமையவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பொதுமக்களின் மனித உரிமைகளை மீறும் செயற்பாடுகள் எவையும் நடந்துள்ளனவா என்பது தொடர்பில் பாரிய சந்தேகக் கேள்விகள் அனைத்து தரப்பினாலும் எழுப்பப்பட்டுள்ளன. இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் சார்பில் கேள்வி எழுப்பும் வேளையில் சர்வதேச அமைப்புக்களும் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இலங்கை மீது அழுத்தங்களை செலுத்தி வருகின்றன. எனினும் இந்த கேள்விகளை சர்வதேச மட்டத்தில் கொண்டு செல்வதனால் இலங்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது. மாறாக, இலங்கையின் பிரச்சினைகளை உள்நாட்டுப் பொறிமுறைகளின் மூலமாகவே தீர்க்க வேண்டும்.
இன்று சர்வதேச அளவில் செயற்படும் ஒருசில அமைப்புக்கள் தமது உடன்படிக்கைகளுக்கு அமைய இலங்கையில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. அவற்றை உள்நாட்டில் கட்டுப்படுத்த முடிந்தாலும் சர்வதேச அளவில் இவர்களது செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாது. எனினும் உள்நாட்டில் நல்லிணக்கத்தையும், சம உரிமைகளையும் மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதன் மூலமாக இலங்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வை எட்ட முடியும்.
அதேபோல் மக்களிடையே ஒற்றுமையையும் ஏற்படுத்த முடியும். இப்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை மீது முன்வைக்கப்படவுள்ள விசாரணை அறிக்கை எவ்வாறானது என்பது தொடர்பில் சரியான தகவல்கள் வெளிவரவில்லை. எனினும் இலங்கை மீது செலுத்தப்படும் அழுத்தங்களை அரசாங்கம் சமாளிக்கும் வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். தமிழர் தரப்பினருக்கும் சர்வதேச தரப்புக்கும் ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை தீர்க்கவேண்டியது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பா கும்.
அதேபோல் இலங்கைக்கு எதிராக எழும் சர்வதேச சிக்கல் நிலைமைகளை சமாளித்து நாட்டையும் இராணுவத்தையும் காப்பற்ற வேண்டியதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதேபோல் குற்றச்சாட்டுக்கள் உண்மையாயின் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் கிடைக்கவேண்டும்.
எனினும் இவை அனைத்தையும் உள் நாட்டு செயற்பாடுகள் மூலமாக கையாள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். உள்ளக விசாரணை பொறிமுறைகளை பலப்படுத்தி அதனூடாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும். அரசாங்கம் அவற்றை சரிவர முன்னெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.