Breaking
Sun. Dec 22nd, 2024
ஒடிஷாவில் மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து 12 கிலோ மீட்டர் தொலைவு நடந்த தானா மஜ்கிக்கு பஹ்ரைன் பிரதமர் 9 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
ஒடிஷாவில் கலாகண்டி மாவட்டத்தில் மெல்கர் கிராமத்தை சேர்ந்தவர் தானா மஜ்கி. இவரது மனைவி அமாங் தை ( வயது 42) காசநேயால் அவதிப்பட்டு வந்தார். கடந்த மாதத்தில் ஆகஸ்ட் 23ம் தேதி அமாங் தையின் உடல் நிலை மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து மெல்கர் கிராம மகளிர் சுயஉதவி குழுவிடம் இருந்து 5 வட்டிக்கு மஜ்கி ரூ. 2 ஆயிரம் கடன் வாங்கி கையில் இருந்த பணத்துடன் வாகனம் ஒன்றை பிடித்து மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
மெல்கர் கிராமத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நக்ருண்டி மருத்துவமனைக்குதான் முதலில் மனைவியை கொண்டு சென்றுள்ளார். அங்கே மருத்துவர் இல்லை. பின்னர், அங்கிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பவானிபட் மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துக் கொண்டு சென்றார்.  அதற்காக வாகனம் ஒன்றை பிடித்துள்ளார். போக வர 3 ஆயிரம் ரேட் பேசியுள்ளார். ஆனால், மருத்துவமனையில் தங்க வேண்டியது இருந்ததால், வாகனத்தை திரும்ப அனுப்பி விட்டார். அப்படி 3 ஆயிரம் செலவாகிவிட்டது.
மேலும் அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனைக்கு ரூ.300 செலுத்தினார். 200 ரூபாய்க்கு மருந்துகள் வாங்கியுள்ளார். மனைவி பெயரில் பதிவு கட்டணமாக ரூ. 100 கட்டியுள்ளார். பேப்பர் சீல் வைக்க ரூ.10  செலுத்தியுள்ளார். முடிவில், மனைவி இறந்த போது மஜ்கியின் கையில் ரூ.300 மட்டுமே எஞ்சியிருந்துள்ளது. கையில் இருந்த பணம் தீர்ந்து விட்ட நிலையில் அமாங் தை இறந்து விட்டார்.
ஆகஸ்ட் 23ம் தேதி  மஜ்கியின் மனைவி இறந்து போனதும் மருத்துவமனையில் இருந்த பலரிடம் உதவி கேட்டு கதறியுள்ளார். எந்த பலனும் இல்லை. விரக்தியடைந்த நிலையில் மனைவியின் உடலை லுங்கியில் கட்டி தோளில் சுமந்தவாறு 12 வயது மகள் சாந்தினியுடமன்  தனது கிராமத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார். பவானிபட் நகரில் இரவு நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகம், உதவி ஆட்சியர் அலுவலகம், எஸ்.பி அலுவலகத்தை எல்லாம் மனைவியின் சடலத்தை சுமந்த தோளுடன்தான் மஜ்கி கிராமத்தை நோக்கி நடந்திருக்கிறார். ஆனால் யாரும் என்னவென்று கேட்கவில்லை.
இரவு முழுவதும் மகளுடன் நடந்த மஜ்கிக்கு மறுநாள் காலைதான் உதவி கிடைத்தது. சடலத்துடன் ஒருவர் நடப்பதை பார்த்த செய்தியாளர்கள் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்து பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மஜ்கியின் சொந்த கிராமத்துக்கு அவரது மனைவியின் சடலம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் மீடியாக்களில் வெளியாகி உலகமே அதிர்ச்சியடைந்தது. இதனைக் கேள்விப்பட்ட பஹ்ரைன் பிரதமர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா, மஜ்கியின் குடும்பத்தினருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக அந்த நாட்டு தூதரகம் வழியாக விபரம் கேட்டிருந்தார்.
இந்த நிலையில், பஹ்ரைன் பிரதமர் சார்பில் மஜ்கிக்கு ரூ.9 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியின் உள்ள பஹ்ரைன் தூதரகம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று  காசோலையை மஜ்கிக்கு வழங்கியது. இதற்கிடையே புவனேஷ்வர் நகரைச் சேர்ந்த கலீஙகா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் நிறுவனம், மஜ்கியின் மகள் சாந்தினி, சோனி, பிரமிளா ஆகியோருக்கு இலவசக் கல்வி வழங்க முன்வந்தது. மஜ்கியின் மகள்கள் தற்போது அங்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

By

Related Post