அத்துருகிரிய, இசுருபுரவில் தன் வீட்டில் வைத்து மனைவியின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள லெப்டினன்ட் கேணல் பிரதீப் குமார தென்னசிங்கவை இராணுவ சேவையிலிருந்து இடைநீக்கம் செய்ய, இராணுவம் தீர்மானித்துள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இராணுவத் தளபதியினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பிலான ஆரம்பக்கட்ட விசாரணைகளை நீதிமன்றத்திலிருந்து பெற்றுக்கொள்ளுமாறு இராணுவத்தளபதி கட்டளையிட்டுள்ளார். அதேபோல, இவ்வாறான சம்பவங்களில் குற்றவாளியாக்கப்படும் இராணுவ அங்கத்தவர்களுக்கு ஆகக்கூடிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவ ஊடகப்பிரிவு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய மனைவியின் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு, அவரை கொலைச்செய்வதற்கு முயன்ற சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 9ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர், பயன்படுத்தியதாக கூறப்படும் சுழல் துப்பாக்கியும், தியவன்னா ஓயாவில், ஜப்பான் நட்புறவு பாலத்துக்கு கீழிருந்து, நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரும்;, கடற்படையினரும் இணைந்தே அந்த சுழல் துப்பாக்கியை மீட்டெடுத்துள்ளனர்.
இதேவேளை, இந்த சுழல் துப்பாக்கியை இனங்கண்டுகொள்வதற்கான சகல தகவல்களும் அவரினால், அழிக்கப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், மனைவியின் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மற்றுமொரு துப்பாக்கியை, தியவன்னா ஓயாவிலிருந்து 30ஆம் திகதியன்று சுழியோடிகளினால் மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட, லெப்டினன்ட் கேணல், கடுவலை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் தம்மிக்க ஹேமபால, முன்னிலையில் அன்றையதினமே ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவானின் உத்தரவில் சந்தேகநபர், எதிர்வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் பயன்படுத்திய வாகனம் மற்றும் துப்பாக்கி என்பன, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அன்றையதினமே சீல் வைக்கப்பட்டன.
அத்துருகிரிய, இசுருபுரவில் உள்ள வீட்டுக்குள் கடந்த 27 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 10.15க்கு அத்துமீறிநுழைந்த இனந்தெரியாத நபர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்,
கேணலின் மனைவியான நயனா பெர்ணான்டோ (வயது 45) என்ற மூன்று பிள்ளைகளின் தாய் படுகாயமடைந்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவசர சிகிச்சைப்பிரிவில் தொடர்;ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அவர், மூன்று சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவர், ஆபத்தான நிலைமையை கடந்துவிட்டதாக வைத்திய பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.
நயனா பெர்ணான்டோவின் அடிவயிறு, வலது கை மற்றும் வலது தொடைப்பகுதி ஆகியவற்றை துளைத்துள்ள துப்பாக்கி ரவைகள், உட்காயங்களையும் ஏற்படுத்தியுள்ளதாக வைத்திய பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.