முஸ்லிம் மக்கள் எமது சகோதரர்கள். முஸ்லிம் நாடுகள் அனைத்தும் எமது நேசநாடுகளே! மன்னர் காலந்தொட்டு எமக்கும் முஸ்லிம்களுக்குமான உறவு தொடர்கிறது. இந்த உறவை சீர்குலைக்க சில சக்திகள் முயற்சிக்கின்றன. அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.
மொனராகலை மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
மொனராகலை வாழ் முஸ்லிம் மக்களை நேரடியாக சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் எனது சகோதரர்கள். அவர்கள் அன்றும் இன்றும் என்றும் எமது சகோதர மக்களே. இதை எவரும் மறுக்க முடியாது.
எமது உறவை இல்லாதொழிக்க சில மோசமான சக்திகள் முயற்சிக்கின்றன. எனினும் நாம் ஒருபோதும் அதற்கு இடமளிக்கப்போவதில்லை.
நீங்கள் ஒருபோதும் சந்தேகம் கொள்ள வேண்டாம். பயம்கொள்ளவும் வேண்டாம். நான் உங்களின் சகோதரன். நான் உங்கள் நண்பன். சொந்தக்காரன்! நான் உங்களைப் பாதுகாப்பேன். அது எனது கடமை.
நீங்கள் என்னை நம்பவும். நானும் உங்களை நம்புகிறேன். தவறான வழியில் செல்ல வேண்டாம். பொய்ப்பிரசாரங்களை நம்பவேண்டாம். நாம் எல்லோரும் ஒன்று படுவோம்.
சாந்தி, சமாதானம், சகோதரத்துவம் ஆகியவையே இஸ்லாமிய மதத்தின் அத்திவாரம். இந்த நாட்டில் அனைவரும் சகோதரர்களாக வாழவேண்டும். அனைத்து மக்களும் சம உரிமையோடும் சுய கெளரவத்தோடும் வாழவேண்டும். அதுவே எமது விருப்பம்.